

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில், காரில் பயணம் செய்த 3 இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்த அப்துல்மஜீத் (24). இவர், குறும்படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் அப்துல்மஜீத் மற்றும் அவருடைய நண்பர்களான பெங்களூருவைச் சேர்ந்த இனையத்(24), டீசாத்(24) ஆகியோருடன், குறும்படம் தயாரித்தல் மற்றும் இடம் தேர்வு (லொகேஷன்) தொடர்பாக பெங்களூருவில் இருந்து நேற்று முன்தினம் பாண்டிச்சேரிக்கு சென்று, அங்கிருந்து நேற்று பிற்பகல் பெங்களூரு திரும்பினர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அண்ணாநகர் பகுதியை கடந்து கார் சென்ற போது திடீரென காரில் இருந்து புகை வந்ததை 3 பேரும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே, காரை சாலையில் நிறுத்தி விட்டு 3 பேரும் கீழே இறங்குவதற்குள்ளாக கார் குபீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
உடனே, அப்துல்மஜீத் மற்றும் அவரின் நண்பர்கள் இரண்டு பேரும் காரில் இருந்து குதித்து இறங்கி ஒடினர். கார் தீப்பிடித்து எரிவதை பார்த்த பகுதி மக்கள் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பிறகு, ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்பூர் தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் கார் முழுவதும் தீப்பிடித்து மளமளவென எரிந்து சேதமானது. இதனால், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை முழுவதும் கரும்புகை சூழ்ந்து புகை மண்டலமாக மாறியது. இதனால், அவ் வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, தீயணைப்பு துறையினர் அங்கு வந்து ரசாயன கலவை மற்றும் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டது.
இது குறித்து ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவமும், காரில் பயணித்த 3 பேரும் அதிர்ஷடவசமாக உயிர்தப்பிய சம்பவமும் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது.