

புதுச்சேரி: அவசர, அவசிய சிகிச்சைகள் ஜிப்மரில் மறுக்கப்படாது, நோயாளிகள் பாதிக்காத வகையில் மருத்துவ சேவையை தொடர ஜிப்மர் இயக்குனருக்கு அறிவுறுத்தியுள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்குப் பிறகு கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகளில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சிகிச்சை தரப்படும் என்றும், மற்ற சிகிச்சைகளுக்கு தொலை மருத்துவ சேவை வழங்கப்படும் என நிர்வாகம் தெரிவித்தது.
ஜிப்மர் மருத்துவமனைக்கு நாள்தோறும் புதுவை மட்டுமின்றி, தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் இருந்தும் நுாற்றுக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற வருவார்கள்.
இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என புகார் எழுந்தது. இதையடுத்து ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் மற்றும் அதிகாரிகளை அழைத்து துணை நிலை ஆளுநர் தமிழிசை பேசினார். ஜிப்மரில் புற நோயாளிகள் சிகிச்சை சேவைகள் தொடர வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளையொட்டி லாஸ்பேட்டையில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை கூறியதாவது:
"புதுவை மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் புதுவை அரசு எடுத்து வருகிறது. ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிரமங்கள் இருப்பதாக அறிந்து அதிகாரிகளுடன் பேசினேன்.
ஜிப்மர் இயக்குனர் மற்றும் நிர்வாகிகள் என்னை சந்தித்து விளக்கம் அளித்தார்கள். 60 சதவீதத்துக்கும் மேலாக மருத்துவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் அதனால் சாதாரண அறிகுறிகளோடு வரும் நோயாளிகளை முழுமையாக கவனிக்க இயலவில்லை என்றும் தெரிவித்தனர்.
எத்தகைய சூழ்நிலையிலும் நோயாளிகள் பாதிப்பு அடையாத வகையில் மருத்துவச் சேவையைத் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவர்களும் உறுதி அளித்துள்ளனர். எனவே அவசர சிகிச்சையும் அவசியமான சிகிச்சையும் ஜிப்மர் மருத்துவமனையிலும் மற்றும் புதுவையில் உள்ள பிற மருத்துவமனைகளிலும் மறுக்கப்படாது."
இவ்வாறு தமிழிசை தெரிவித்துள்ளார்.