Published : 23 Jan 2022 02:57 PM
Last Updated : 23 Jan 2022 02:57 PM

இந்தியாவில் நம்பர் 1 மாநிலம் தமிழகம் என்ற நிலை வரவேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: இந்தியாவின் நம்பர் 1 முதல்வர் என்பதை விட நம்பர் 1 மாநிலம் தமிழகம் என்று சொல்லும் நிலை வர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில், திமுக தலைமை நிலையச் செயலாலரும், வீட்டுவசதி துறை வாரியத் தலைவருமான பூச்சி முருகனின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "இந்தத் திருமணம் ஒரு கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டிருக்கிறது. என்ன கட்டுப்பாடு என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். கரோனா என்கிற ஒரு தொற்று நோய் இன்றைக்கு நாடு முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், நம்முடைய தமிழகத்தைப் பொருத்தவரையில் எந்த விதிமுறைகளை அதற்காக கடைப்பிடிக்க வேண்டும் என்று நாம் அறிவுறுத்தி இருக்கிறோமோ, வலியுறுத்தி சொல்லி இருக்கிறோமோ அந்த கட்டுப்பாட்டிற்குள் நடக்கும் திருமணம், இந்த திருமணம். எனவே அரசினுடைய கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இந்த திருமணத்தை நடத்திக் கொண்டிருக்கும் பூச்சி முருகனை நான் நெஞ்சார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன், அதற்காக நான் நன்றி சொல்லவும் விரும்புகிறேன்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் பேசுகிறபோது, இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் மாநிலத்தில் இருக்கும் முதல்வர்களை எல்லாம் குறிப்பிட்டுச் சொல்லி, ஒப்பிட்டுச் சொல்லி, அதில் முதல் முதல்வராக - நம்பர்-1 முதல்வராக இன்றைக்கு ஸ்டாலின் இருக்கிறார் என்று பெருமையோடு சொன்னார்.என்னை பொறுத்தவரை நம்பர்-1 முதல்வர் என்பதை விட நம்பர் 1 மாநிலம் தமிழகம் என்று சொல்லும் நிலை வர வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறோம், பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் தான் நீங்களும் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கிறீர்கள்.

இந்தத் திருமணத்தைப் பொறுத்த வரைக்கும், இது ஒரு சீர்திருத்த திருமணமாக, சுயமரியாதை உணர்வோடு நடைபெறும் திருமணமாக, தன்மானத்தோடு நடைபெறும் திருமணமாக இந்தத் திருமணம் நடந்தேறியிருக்கிறது.கொஞ்சம் நினைத்து பாருங்கள். 1967-க்கு முன்பு, இதுபோல சீர்திருத்த திருமணங்கள் நாட்டில் நடந்தால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும் என்று அங்கீகாரத்தைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் 1967-இல் முதல் முதலில் பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி பொறுப்பேற்று சட்டமன்றத்திற்குள் அண்ணா முதல்வராக நுழைந்து, முதல் தீர்மானமாக சீர்திருத்தத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை பெற்றுத் தந்தார்கள்.எனவே இன்றைக்கு நடைபெற்றிருக்கும் இந்த சீர்த்திருத்தத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தோடு நடந்தேறியிருக்கிறது.

கட்சியில் சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கக்கூடியவர் நம்முடைய பூச்சி முருகனை சிலர் பூச்சி என்றும் கூப்பிடுகிறார்கள். நான் பெரும்பாலும் பூச்சி என்று கூப்பிடுவது இல்லை. முருகன், முருகன் என்று தான் கூப்பிடுவேன். ஏனென்றால் முருகன் மீது நமக்கு அன்பு உண்டு, பாசம் உண்டு. துரைமுருகனை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். எனவே அப்படிப்பட்ட பெயரை பெற்றிருக்கும் பூச்சி முருகன் அவர்கள் இல்லத்தில் நடக்கும் இந்த மணவிழாவில் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். அது என்னவென்று கேட்டால், உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள் என்பது தான் அந்த வேண்டுகோள்.

உன் பெயர் என்ன தமிழ் பெயரா? என்று என்னைப் பார்த்து நீங்கள் கேட்கலாம். அது ஒரு காரணப் பெயர். அதற்கு நான் பல இடங்களில் விளக்கமாக சொல்லி இருக்கிறேன். பல பத்திரிகைகளில், செய்திகளில் படித்து நீங்களும் தெரிந்து வைத்திருப்பீர்கள். கம்யூனிசக் கொள்கை மீது கருணாநிதிக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அதனால் தான் ஸ்டாலின் இறந்த நேரத்தில் நான் பிறந்த காரணத்தால் அவருடைய நினைவாக இந்தப் பெயரை எனக்கு சூட்டினார்கள்.

அந்தப் பெயரை சூட்டுவதற்கு முன்பு எனக்கு என்ன பெயர் சூட்ட வேண்டும் என்று நினைத்திருந்தார் என்று சொன்னால், ‘அய்யாதுரை’ என்று தான் பெயர் சூட்ட நினைத்தார்கள். ‘ஐயா’ என்றால் யார் என்று தெரியும், தந்தை பெரியார். ‘துரை’ என்றால், அண்ணாவின் பெயருக்குப் பின்னால் வரும் துரை என்று சேர்த்து வைக்க வேண்டும் என்று கருதி இருந்தார்கள். என்னுடைய அண்ணன்கள் மு.க.முத்துவாக இருந்தாலும், அழகிரியாக இருந்தாலும், தம்பி தமிழரசாக இருந்தாலும், தங்கை கனிமொழியாக இருந்தாலும், செல்வியாக இருந்தாலும் எல்லாம் தமிழ்ப் பெயர்கள் தான். அதற்கெல்லாம் ஒரு காரணம் இருக்கிறது.

எனவே இதை மனதில் வைத்துக் கொண்டு இன்றைக்கு மணமக்களாக வீற்றிருப்போர் நிச்சயமாக அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும்.

எனவே அப்படிப்பட்ட தமிழை வளர்க்கின்ற முயற்சிகளில் நீங்கள் ஈடுபட வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் அன்போடு கேட்டுக் கொண்டு மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் பெற்று, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும், “வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்கு தொண்டர்களாக” வாழுங்கள்,வாழுங்கள்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x