Published : 23 Jan 2022 01:29 PM
Last Updated : 23 Jan 2022 01:29 PM

விக்ரவாண்டி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் தீவிரம்: இணைப்புச் சாலையை முடக்கக்கூடாது என  கிராம மக்கள் போராட்டம்

ஜெயங்கொண்டம்: 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்று வரும் இணைப்புச் சாலையை தடுத்து தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நடப்பதைக் கண்டித்து அரியலூர் மாவட்டம், தென்னவநல்லூர் கிராம மக்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இணைப்புச் சாலையை முடக்கக்கூடாது என 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி – தஞ்சாவூர் இடையே 165 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டம் கடந்த 2010-ஆம் ஆண்டில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு, கும்பகோணம் ஆகிய பகுதிகளை இணைக்கும் இந்த நெடுஞ்சாலையின் பணிகள் கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு கட்டமாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் இன்று காலை அரியலூர் மாவட்டம், தென்னவநல்லூர் என்ற ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் சாலைக்கு இடையே மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையோடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் வைக்கும் கோரிக்கை குறித்து அந்தப் பகுதியின் ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷிடம் கேட்டபோது,‘தஞ்சை – விக்ரவாண்டி இடையே உருவாகி வரும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அணைக்கரைக்கு முன்பாக உள்ள அரியலூர் மாவட்டம், தென்னவநல்லூரில் தற்போது நெடுஞ்சாலைப் பணிகள் நடந்து வருகிறன. அந்த கிராமத்தை அடுத்துள்ள ஆயுதகளம், வேம்புகுடி, உட்கோட்டை, காக்கனேரி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராம மக்களின் அன்றாட போக்குவரத்தை இணைக்கும் பகுதியில் தென்னவநல்லூர் இணைப்புச் சாலை உள்ளது. பள்ளி மாணவர்கள் தொடங்கி வயதான பொதுமக்களின் மருத்துவ பயணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இந்த வழியாகவே சென்று வர வேண்டும்.

கிட்டத்தட்ட இந்தப் பகுதியில் 6000-க்கும் மேற்பட்ட மக்கள் போக்குவரத்து பயன்பெற்று வரும் இணைப்புச் சாலையைத் தடுத்து போக்குவரத்துக்கு இடமில்லாமல் நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடக்கிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஏற்கெனவே கோரிக்கை மனு அளித்துள்ளோம். ஆனாலும், தற்போது முழு முனைப்போடு இணைப்புச் சாலையை முடக்கி நெடுஞ்சாலை பணிகள் நடக்கின்றன. எனவே போராட்டத்தில் ஈடுபடுகிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதில் கவனம் செலுத்தி இணைப்புச் சாலையை முடக்காமல் குறிப்பிட்ட இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும். அதன்பின்னர் சாலைப் பணிகளை தொடங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x