

சென்னை: கரோனா தொற்று பரவலின் எண்ணிக்கை குறைவதைப் பொறுத்து வரும் வாரங்களில் ஞாயிறு முழு ஊரடங்கை விலக்கிக் கொள்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் மரியாதை: சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்ததினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்துக்கு தமிழக அரசின் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " மூன்றாவது அலை தொடங்கியதிலிருந்து, தமிழக முதல்வர், இரவு நேரங்களில் 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு என்ற நடவடிக்கையை முன்னெடுத்தார். அந்த வகையில், தமிழகம் முழுவதும் மக்களும் அதற்கு முழு ஒத்துழைப்புத்தந்து மிக சிறப்பாகவே அது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கடந்த இரண்டு வார காலமாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு என்பது நடைமுறையில் இருக்கிறது. இந்த முழு ஊரடங்கை மக்கள் மிக சிறப்பாக, நேர்த்தியாக கடைபிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக வெறிச்சோடிய சாலைகளும், தமிழகத்தின் ஸ்தம்பித்த நிலையும் இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது.
இந்த மூன்றாவது பேரிடர் அலையில் இருந்து தப்பிக்க தமிழக முதல்வர் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் ஒத்துழைப்பு அளித்துக் கொண்டிருக்கிறார்களுக்கு என்பதற்கு சான்றாக இந்த ஊரடங்கு வெற்றி இருக்கிறது.
சென்னையைப் பொருத்தவரை, 9 ஆயிரமாக இருந்த தொற்று எண்ணிக்கை நேற்று 6 ஆயிரமாக குறைந்திருப்பது நிறைவு தருகிறது. இந்தியா முழுவதும் உள்ள பெருநகரங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருவது ஆறுதலான விசயம். இந்த தொற்றுக்கு முற்று ஏற்படும்போது, முழு ஊரடங்கெல்லாம் தேவையற்றதாக மாறிவிடும்.
தொற்று எண்ணிக்கை 600 என்ற அளவில் இருந்த போது இறப்பு எண்ணிக்கை 4 முதல் 5-ஆக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 25 முதல் 30-ஆக அதிகரித்துள்ளது. 30 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் தொற்று பாதிப்பு இருக்கும்போது, சதவீத அடிப்பைடயில் பார்க்கும்போது இறப்பு எண்ணிக்கை 25 முதல் 30 ஆக இருப்பது சற்று அதிகம்தான் என்றாலும், இறந்தவர்களின் மருத்துவப் பின்னணியைப் பார்க்கும்போது, முழுமையாக அவர்கள் வேறு இணை நோய்கள் உள்ளவர்கள், குறிப்பாக தடுப்பூசியே செலுத்திக் கொள்ளாதவர்கள். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் யாரும் இதுவரை இறப்பின் எல்லைக்குச் செல்லவில்லை" எனத் தெரிவித்தார்.