

சென்னை: சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-ஆவது பிறந்த தினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நாடு முழுவதும் இன்று சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-ஆவது பிறந்ததினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில், அவரது மனைவி ஆனந்திராவ் வி.பாட்டீல், ஆளுநரின் முதன்மைச் செயலாளர், ராஜ்பவன் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
"இந்த நாளில், தேசத்தை முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு நாட்டு மக்களும் இளைஞர்களும் சகோதரத்துவத்தை வலிமைப்படுத்த வேண்டும் என்றும், எப்போதும் தேச நலனுக்கு முன்னுரிமை என்ற நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கொள்கைகளைப் பின்பற்றி நடப்போம் என ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும்" என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.