

பொங்கலையோட்டி அரசு பேருந்துகளில் 7 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.138.07 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
பொங்கலை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்தஊர்களுக்குப் பயணம் செய்யவும், பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்குத் திரும்பும்வகையிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
பொதுமக்களிடம் வரவேற்பு
அதன்படி, அரசு செயல்படுத்தியுள்ள கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பேருந்துகள் இயக்கப்பட்டன. இது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
கடந்த 11, 12, 13-ம் தேதிகளில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 18,232 தினசரி பேருந்துகள் மற்றும் 1,514 சிறப்புப் பேருந்துகளில் 3 கோடியே 22 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதன் வாயிலாக ரூ.65 கோடியே 58 லட்சம் வருவாய்ஈட்டப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டை விட 96 லட்சம் பயணிகள் அதிகமாக பயணம் செய்ததன் மூலம், ரூ.3 கோடியே 50 லட்சம் கூடுதலாகக் கிடைத்துள்ளது.
7 கோடி பேர் பயணம்
பொங்கலுக்குப் பிறகு, கடந்த 15, 17, 18, 19-ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக சராசரியாக நாள் ஒன்றுக்கு 17,164 தினசரி பேருந்துகளில் 3 கோடியே 80 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.72 கோடியே49 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.கடந்த 2021-ம் ஆண்டை விட ஒருகோடியே 7 லட்சம் பயணிகள் கூடுதலாக பயணம் செய்துள்ளனர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஒட்டுமொத்தமாக 7 கோடி பேர் தமிழகம் முழுவதும் பயணம் செய்துள்ளனர். இதன் வாயிலாக ரூ.138 கோடியே 7 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.