

தமிழகத்தில் கரோனா பரவலைகட்டுப்படுத்த இன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது தமிழகத்தில் கரோனா - ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழலில், பொதுமக்கள் நலன் கருதி தொற்றுபரவலை கட்டுப்படுத்தும் வகையில்ஜன.23-ம் தேதி (இன்று) முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
கடந்த 16-ம் தேதி முழு ஊரடங்கின்போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் இன்றும் அனுமதிக்கப்படும். தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும்.
வெளியூர்களில் இருந்து வரும்பயணிகள் நலன் கருதி, சென்னைசென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் டாக்ஸிகள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும். மாவட்ட ரயில் நிலையங்கள், வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும்.
கரோனா தொற்றில் இருந்துமக்களை காக்க அரசு மேற்கொள்ளும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டு இன்று நடைபெறும் திருமணங்களுக்கு செல்வோர், அழைப்பிதழ் வைத்திருந்தால் அவர்களை காவல்துறையினர் அனுமதிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
டாஸ்மாக் கடைகள் இயங்காது
டாஸ்மாக் கடைகள் இன்று இயங்காது என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் சுப்பிரமணியன் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழக அரசு எந்த வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கை 23-ம் தேதி (இன்று) அமல்படுத்தியுள்ளது. எனவே, டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களை மூட வேண்டும். மதுபான கடைகள், மதுக்கூடங்கள் மூடியிருப்பதை மாவட்ட மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.