Published : 23 Jan 2022 06:03 AM
Last Updated : 23 Jan 2022 06:03 AM
கும்பகோணம் அருகே அணைக்கரையில் புதிய பாலம் கட்டுமானத்தின்போது, கிரேன் கம்பி அறுந்து கான்கிரீட் காரிடர் விழுந்ததில் பாலத்துக்கான கான்கிரீட் தளம், தூண் உள்ளிட்ட கட்டுமானங்கள் சிறிதளவு சேதமடைந்தன.
தஞ்சாவூர் மாவட்டத்துடன், அரியலூர், கடலூர் மாவட்டங்களையும் இணைக்கும் வகையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அணைக்கரை என்ற இடத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு மதகு பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலம் வலுவிழந்து காணப்பட்டதால், தற்போது கனரக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, விக்கிரவாண்டி- கும்பகோணம்- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஒருபகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம் தத்துவாஞ்சேரி முதல் அரியலூர் மாவட்டம் தென்னவநல்லூர் கிராமம் வரை, அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் 1.2 கி.மீ நீளத்துக்கு புதிய பாலத்துடன், 5 கி.மீ தொலைவுக்கு புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2018-ம் ஆண்டு பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்தப் பாலத்தில், 16 மற்றும் 17-வது தூண்களை கான்கிரீட் காரிடர் மூலம் இணைக்கும் பணியில் நேற்று அதிகாலை 15 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 12 அடி அகலம், 50 மீட்டர் நீளமுள்ள கான்கிரீட் காரிடரை ஜாக்கி கிரேன் மூலம் தூக்கி, தூண்கள் மீது வைப்பதற்காக கொண்டு சென்றபோது, கான்கிரீட் காரிடரில் பொருத்தப்பட்டிருந்த கிரேன் கம்பி அறுந்ததால், காரிடர் கீழே விழுந்தது. உடனே, தொழிலாளர்கள் தண்ணீரில் குதித்து உயிர்த் தப்பினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இச்சம்பவத்தில், புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம், அதன் தூண்கள் சிறிய அளவில் இடிந்து, சேதமடைந்தன.
இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை உயர் அலுவலர்கள் மற்றும் கட்டுமான நிறுவன நிர்வாகிகள் அங்கு சென்று, சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட்டனர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை உயர் அலுவலர் ஒருவர் கூறியது: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கிரேனில் உள்ள கம்பி அறுந்ததால் கான்கிரீட் காரிடர் ஆற்றில் விழுந்துவிட்டது. இதில், சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது. பாலத்தின் தூண்களுக்கு பாதிப்பில்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!