

கோவை: கோவை உக்கடத்தில் மொத்த மீன் மார்க்கெட் வளாகம் உள்ளது. தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் இங்கு விற்பனைக்காக அதிகளவில் மீன்கள் கொண்டு வரப்படுகின்றன. உக்கடம் மார்க்கெட்டில் இருந்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் மீன்களை வாங்கிச் செல்வது வழக்கம். மீன் மார்க்கெட்டுகளில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். தற்போது கரோனா பரவலால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், உக்கடத்தில் உள்ள சில்லரை மீன் மார்க்கெட் வளாகத்தில் நேற்று பொதுமக்கள் திரண்டனர்.
மீன்களின் வரத்து குறைந்ததால், கடந்த வாரத்தை ஒப்பிடும்போது, தற்போது மீன்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக் கின்றனர். அதிகபட்சம் வஞ்சிரம் மீன் கிலோ ரூ.750-க்கும், ஊளி மீன் சிறியது ரூ.350-க்கும், பெரியது ரூ.500-க்கும், அயிலை மீன் ரூ.300-க்கும், மத்தி மீன் ரூ.250-க்கும், வெளமீன் சிறியது ரூ.450-க்கும், பெரியது ரூ.600-க்கும், பாறை மீன் ரூ.500-க்கும், நெத்திலி மீன் ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.