Published : 26 Apr 2016 08:08 AM
Last Updated : 26 Apr 2016 08:08 AM

ஜெயலலிதா, கருணாநிதி, அன்புமணி வேட்புமனு தாக்கல்: ஒரே நாளில் 777 பேர் மனு தாக்கல்

சென்னை ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதாவும் திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதியும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அதேபோல, பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், பென்னாகரம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவைக்கு மே 16-ல் தேர்தல் நடக்கவுள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார். சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர், எம்எல்ஏ பதவிகளை இழந்த ஜெயலலிதா, கடந்த 2015 ஜூன் மாதம் நடைபெற்ற ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இப்போது அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

அதற்கான வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். நேற்று பகல் 12.05 மணிக்கு போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்ட ஜெயலலிதா தண்டையார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி 4-வது மண்டல அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் தோழி சசிகலாவும் வந்தார். அங்கு தமிழக எஸ்சி, எஸ்டி நலத்துறை இணை இயக்குநரும், ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான டி.என்.பத்மஜா தேவியிடம் வேட்பு மனுவை ஜெயலலிதா தாக்கல் செய்தார்.

அவரது வேட்புமனுவை வட சென்னை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் காளிதாஸ் முன்மொழிந்தார். ஜெயலலிதாவுக்கு மாற்று வேட்பாளராக அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் வரும் 28-ம் தேதி மனு தாக்கல் செய்ய உள்ளார்.

திருவாரூரில் கருணாநிதி

திருவாரூர் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதி, நேற்று காலை 11 மணி அளவில் காட்டூரில் உள்ள தனது தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார். பின்னர், சன்னதி தெருவில் உள்ள சகோதரியின் வீட்டுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். மதியம் 12.30 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு, தெற்கு வீதியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்ற கருணாநிதி, அங்கு திருவாரூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துமீனாட்சியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். உறுதிமொழியைப் படித்து கையெழுத்திட்டு, அதற்கான படிவத்தையும் வழங்கினார்.

கருணாநிதியை திருவாரூர் நகர்மன்ற துணைத் தலைவர் டி.செந்தில் முன்மொழிந்தார். மாற்று வேட்பாளராக திருவாரூர் முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஆர்.பி.சுப்ரமணியன் வேட்புமனு தாக்கல் செய்தார். மனு தாக்கலின்போது கருணாநிதியுடன் ராசாத்தி அம்மாள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், மாவட்டச் செயலாளர் பூண்டி கே.கலைவாணன் ஆகியோர் இருந்தனர்.

தருமபுரியில் அன்புமணி

பாமக சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ், பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர், பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று மதியம் 12.20 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனுவை அன்புமணியின் உதவியாளர் சொல்லின்செல்வன், பாமக மாநில நிர்வாகி செல்வம், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் வெங்கடேசன், முன்னாள் பென்னாகரம் ஒன்றியக் குழு தலைவர் மாது ஆகியோர் முன்மொழிந்தனர்.

777 பேர் மனு தாக்கல்

வேட்புமனு தாக்கல் கடந்த 22-ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. அன்றைய தினம் மாநிலம் முழுவதும் 83 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனர். இரண்டாம் நாளான நேற்று தமிழகம் முழுவதும் 777 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதி, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். அருகில் ராசாத்தி அம்மாள், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர்.

பென்னாகரம் தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மல்லிகாவிடம் நேற்று வேட்புமனுவை அளித்தார்.

மனுவை எப்படி வாங்குவது?

தமிழகத்தில் சில இடங்களில் வேட்பாளர்கள் மனுவை தாக்கல் செய்யும்போது தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எழுந்து நின்று மனுவை பெறுகின்றனர். பல இடங்களில் இருக்கையில் அமர்ந்தபடியே பெற்றுக் கொள்கின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா, நேற்று வேட்புமனு தாக்கல் செய்தபோது, அலுவலர் எழுந்து நின்று மனுவை பெற்றார்.

இதுகுறித்து தேர்தல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மனுக்களை எழுந்து நின்று வாங்க வேண்டுமா அல்லது அமர்ந்த படியே வாங்க வேண்டுமா என்பது தொடர்பாக தேர்தல் விதிகளில் கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை. இது அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரின் விருப்பத்தைப் பொறுத்தது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x