Published : 23 Jan 2022 06:53 AM
Last Updated : 23 Jan 2022 06:53 AM

வீட்டு வசதி வாரியத் தலைவராக பூச்சி முருகன் நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவராக பூச்சி எஸ்.முருகன், பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவராக துறைமுகம் காஜா (எ) காஜா முகைதீனை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

`அனைவருக்கும் வீடு’ என்ற குறிக்கோளை எட்டும் வகையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், அனைத்து மக்களும் வாங்கத்தக்க விலையில் வீடுகளை வழங்கி வருகிறது.

வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வீடுகள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்காக பல்வேறு திட்டங்கள் மூலம் வழங்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்களின் வீட்டுக் கனவை நனவாக்கியுள்ளது.

அத்தகு சிறப்புமிக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவராக பூச்சி எஸ்.முருகனை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவர் ஏற்கெனவே திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர், விளையாட்டு மேம்பாட்டுக் குழு உறுப்பினர், தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளைக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை திறம்பட வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த தனிநபர் மற்றும் குழுக்களுக்கு உதவும் வகையில், குறைந்த வட்டி விகிதத்தில் பல்வேறு கடனுதவித் திட்டங்களை பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தி வருகிறது.

இந்த அமைப்பின் செயல்பாடுகளை மேலும் செம்மைப்படுத்தும் வகையில், அதன் தலைவராக துறைமுகம் காஜா (எ) காஜா முகைதீனை நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x