Published : 23 Jan 2022 07:01 AM
Last Updated : 23 Jan 2022 07:01 AM

தமிழக அரசு, `இந்து தமிழ் திசை' சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி; பெண் குழந்தைகள் பருவமடையும் காலத்தில் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் அவசியம்: ஊட்டச்சத்து நிபுணர் கவுசல்யா நாதன் வலியுறுத்தல்

சென்னை

தமிழக அரசுடன் ‘இந்து தமிழ் திசை'நாளிதழ் இணைந்து நடத்திய இணைய நிகழ்ச்சியில் “பெண் குழந்தைகள் பருவமடையும் காலத்தில் ஊட்டச்சத்துகள் மிகுந்த உணவுகளை உண்பது அவசியம்" என்று ஊட்டச்சத்து நிபுணர் கவுசல்யா நாதன் கூறினார்.

வளரிளம் பருவ பெண் குழந்தைகள், தங்களது உடல், மன ஆரோக்கியத்தில் போதுமான அளவுக்கு அக்கறை செலுத்துவதில்லை என்பதால், அரசு சார்பில் ஆரம்ப சுகாதார நிலையங்களைப் பள்ளிகளுடன் இணைத்து ‘மேம்படுத்தப்பட்ட பள்ளி சுகாதார திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் ஆசிரியர்கள் மற்றும் ஆலோசகர்களின் துணையுடன், மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ‘இந்து தமிழ் திசை' நாளிதழுடன் இணைந்து 11 முதல் 18 வயது வரையிலான வளரிளம் பருவ பெண் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இணையவழியில் நேற்று நடைபெற்றது.

தொடக்க உரையாற்றிய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநர் வி.அமுதவல்லி, “வளரிளம் பருவ பெண் குழந்தைகள் காலை உணவை எக்காரணத்துக்காகவும் தவிர்க்கக் கூடாது. அது உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது” என்றார்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஊட்டச்சத்து நிபுணர் கவுசல்யா நாதன் பேசியதாவது: 11 முதல் 13 வயது வரையிலான காலகட்டத்தில் பெண்கள் பருவமடைவதற்கு தயாராவார்கள். உடலில் உள்ள ஹார்மோன்கள் மாற்றமடையும். உடல் வளர்ச்சியும் வேகமாக இருக்கும்.

இந்த காலகட்டத்திலும், 18 வயது வரையும் இவர்கள் அதிக ஊட்டச்சத்து உள்ள உணவுகளை உண்பது அவசியம். குறிப்பாக, இரும்பு, புரதம், மாவுச் சத்துகள் அதிகம் உள்ள உணவுகளை கொடுக்க வேண்டும். எள் மற்றும் வெல்லத்தால் செய்த, விலை மலிவான எள்ளுருண்டையைக் கொடுக்கலாம்சத்து மாவு பாயாசம், சிறுதானிய சப்பாத்தி போன்றவற்றை குழந்தைகள் விரும்பும் வழிகளில் வழங்கலாம்.

உளுந்து அதிகம் உள்ள இட்லி, தோசை ஆகியவையும் சிறந்த உணவுகள்தான். வேர்க்கடலையை வெல்லப் பாகுடன் சேர்ந்து உருண்டையாகவோ, பர்பி வடிவிலோ கொடுக்கலாம்.

பெண் குழந்தைகள் பருவமடைவது அவர்களது பரம்பரையை பொறுத்து 10 முதல் 16 வயது வரை எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். 10 வயதில் பருவமடைந்துவிட்டால் பெற்றோர் வருத்தப்படத் தேவையில்லை. குழந்தைக்கு ஆதரவாக இருந்து, பருவமடைவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உதிரப் போக்கு குறைவாக இருந்தாலும், வழக்கமாக இருந்தாலும் ஒரு நாப்கினை 6 மணி நேரத்துக்கு மேல் பயன்படுத்தக்கூடாது. 11 முதல் 18 வயது வரையிலான காலத்தில் உணவில் அதிக அளவு காய்கறி, கீரை, பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த உணவு முறைகளைக் கடைப்பிடித்தால், ஆரோக்கியமான உடல், மன நலனை பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியை, இளம் ஊட்டச்சத்து தூதர் ஹாசினி லட்சுமிநாராயணன் ஒருங்கிணைத்தார். `இந்து தமிழ் திசை' பொது மேலாளர் (விநியோகம்) டி.ராஜ்குமார், கல்வியாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x