கடைகள் உள்வாடகைக்கு விடப்படுவது அதிகரிப்பு; தாம்பரம் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு: உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கடைகள் உள்வாடகைக்கு விடப்படுவது அதிகரிப்பு; தாம்பரம் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு: உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Updated on
1 min read

தாம்பரம் மாநகராட்சிக்குச் சொந்தமான கடையை மிகக் குறைந்த வாடகைக்கு ஏலம் எடுத்து அதிக தொகைக்கு உள்வாடகைக்கு விட்டு மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

தாம்பரம் மாநகராட்சியின் ஐந்துமண்டலங்களிலும் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள், குறிப்பிட்ட காலம் ஏலம் எடுத்த உரிமதாரர்களால், நடத்தப்படாமல் சட்ட விரோதமாகக் கூடுதல் தொகைக்கு உள்வாடகைக்கு மாற்று நபர்களால் நடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. மாநகராட்சி விதிகளின்படி கடைகளை உள்வாடகைக்கு விடுவது குற்றமாகும். அரசியல் தலையீடு காரணமாக, வாடகை வசூலிக்கப்பட வில்லை. உள்வாடகை மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: அரசுக்கு வருவாய் ஈட்டுவதற்காகவே உள்ளாட்சி அமைப்புகளால் பல லட்சம் செலவு செய்து கடைகள் கட்டப்பட்டுள்ளன. கடைகளை ஏலம் எடுத்த பெரும்பாலானோர் சொந்தமாக கடை நடத்தாமல் உள்வாடகைக்கு விட்டு விடுகின்றனர். தோராயமாக ஒரு கடைக்கு ரூ.5,000 வாடகை என்றால் அதை குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை உள்வாடகைக்கு விடுகின்றனர். இதனால், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மாநகராட்சி கடையை வாடகைக்கு எடுத்து பெரும்பாலானோர் (கட்சியினர்) இதையே செய்கின்றனர்.

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்காமல் தயக்கம் காட்டி வருகின்றனர். குறிப்பாக செம்பாக்கம், தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர் போன்ற இடங்களில் உள்ள தாம்பரம் மாநகராட்சி சொந்தமான வணிக வளாகங்களில் ஏராளமாக கடைகளை உள்வாடகைக்கு விட்டுள்ளனர். எனவே, தாம்பரம் மாநகராட்சி முறையாக ஆய்வு செய்து உள்வாடகைக்கு விடப்பட்டுள்ள கடைகளை ஆய்வு செய்து, அப்புகார் உண்மையாக இருப்பின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in