Published : 23 Jan 2022 07:06 AM
Last Updated : 23 Jan 2022 07:06 AM

தஞ்சாவூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட பாஜக வலியுறுத்தல்

தஞ்சாவூர் தனியார் பள்ளியில் படித்த மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட பாஜக வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த மாணவியை மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் பாஜக சார்பில் மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், பாஜக தேசியசெயற்குழு உறுப்பினர் குஷ்பு பேசியதாவது:

அனைவர் வீட்டிலும் பெண்குழந்தை உள்ளது. இழந்தவர்களுக்கு மட்டும்தான் வலி தெரியும். திமுகவுக்கு இழந்தவர்களின் வலிதெரியாது. அவர்களுக்கு அரசியல் மட்டும்தான் தெரியும். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை முதல்வர் வாய் திறக்காதது ஏன்? மதமாற்றம் குறித்து மாணவியே வீடியோ பதிவின் மூலம் வாக்குமூலம் கொடுத்தும் ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை.

எல்லாவற்றுக்கும் குரல் கொடுக்கும் தொல்.திருமாவளவன் எங்கே போனார். அவர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை. காங்கிரஸ் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் சாலைக்கு வந்துமுதல்வரிடம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்த முடியுமா என்று சவால் விடுகிறேன்.

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வானதி சீனிவாசன்

இதுதொடர்பாக பாஜக மகளிரணி தேசிய தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், கோவையில் வெளியிட்ட அறிக்கையில், "அரியலூர் மாவட்டம், வடுகர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி, தனது தற்கொலைக்கு காரணம் மதமாற்ற முயற்சிகள் என்பதையும், தனக்கு நிகழ்ந்தகொடுமைகளையும் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.

ஆனால் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், "மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதால்தான் மாணவி தற்கொலைசெய்து கொண்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை" என்று கூறியுள்ளார். ஆகையால் நேர்மையான விசாரணை நடைபெற, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

ஜி.கே.வாசன்

இதுகுறித்து தமாகா தலைவர்ஜி.கே.வாசன் திருவையாறில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரியலூரைச் சேர்ந்த பள்ளிமாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகவும் வேதனைக்குரியது. இதுபோன்ற நிலை இனி எப்போதும், எங்கேயும் ஏற்படக்கூடாது.

எனவே, இந்த விவகாரத்தில் விரைந்து விசாரணை செய்து, குற்றவாளிக்கு தகுந்த தண்டனையை உடனடியாக பெற்றுத்தர வேண்டும். அதுவே மற்றவர்களுக்குப் பாடமாக இருக்கும். இந்த விவகாரத்தில், தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x