Last Updated : 23 Jan, 2022 07:33 AM

 

Published : 23 Jan 2022 07:33 AM
Last Updated : 23 Jan 2022 07:33 AM

கடன்தாரர் இல்லாத சூழலில் குடும்பத்தினர் நகையை மீட்பதில் சிக்கல்: நகைக் கடனுக்கு ‘நாமினி ’ நியமிக்க நடவடிக்கை எடுக்குமா ரிசர்வ் வங்கி?

சென்னை

வங்கிகளில் நகைக் கடன் பெறும்போது ‘நாமினி’யை நியமிக்கும் வசதி இல்லாததால், கடன் பெற்றவர் இறக்கும் சூழலில், அவரது குடும்பத்தினர் கடனை அடைத்து நகையை மீட்பதில் சிக்கல் எழுவதாக புகார் எழுந்துள்ளது.

வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன், தங்க நகைக் கடன் என பல்வேறு கடன் வசதிகள் வழங்கப்படுகின்றன. இதில் ஒவ்வொரு கடனுக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வட்டியாக வசூலிக்கப்படுகிறது. நகைக்கடனை பொறுத்தவரை, தமிழகத்தில் மட்டும் வங்கிகள் மூலம் ரூ.6 லட்சம் கோடி அளவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

பொதுவாக, கடன் பெறுபவர் தனது குடும்ப உறுப்பினரை ‘நாமினி’யாக நியமிக்க வேண்டும். ஒருவேளை, கடன் பெற்றவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், சம்பந்தப்பட்ட கடனை அந்த நியமனதாரர் தொடர்ந்து செலுத்த வேண்டும்.

ஆனால், நகைக் கடனுக்குஇவ்வாறு நாமினி நியமிக்கும் வசதி கிடையாது. இதனால், நகைக் கடன் பெற்றவருக்கு அசம்பாவிதம் நிகழ்ந்தால், அவரது குடும்பத்தினரால் அந்த நகைக் கடனை அடைத்து நகையை மீட்பது கடும் சிரமமாக உள்ளது.

இதுகுறித்து நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த ஜெயராமன், சடகோபன் ஆகியோர் கூறியதாவது:

வங்கிகளில் நகைக் கடன்களுக்கு குறைந்த அளவு வட்டி வசூலிப்பதால், பலரும் அவசரத் தேவைகளுக்கு நகைக் கடன் பெற விரும்புகின்றனர். ஆனால், நகைக் கடன் பெறும்போது, இக்கடனுக்கு நாமினியாக யாரையும் நியமிக்க முடியாது.

இதனால், கடன் நிலுவையில் இருக்கும்போது கடன்தாரர் இறந்துவிட்டால், சட்ட சிக்கல்கள் எழுகின்றன. பல நேரம், கடன் பெற்றவரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு அத்தகைய நகைக் கடன் இருக்கும் விவரமே தெரிவதில்லை. இதனால், அது வாராக் கடனாக மாறிவிடுகிறது.

இத்தகைய சூழலில், வங்கிகள் கேட்கும் வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை வாரிசுதாரர்கள் பெற்று வங்கியில் சமர்ப்பிக்க பல மாதங்கள்கூட ஆகிவிடும். சில நேரம், இந்த ஆவணங்களை பெற நீதிமன்றங்களைக்கூட நாடவேண்டிய நிலை ஏற்படும்.

இதனால், கையில் பணம் இருந்தாலும் கடனை கட்டி முடித்து நகையை மீட்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக, நகைக் கடனுக்கு வட்டி அதிகரிக்கும்.

எனவே, இத்தகைய சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில், வங்கிக் கணக்கு, நிலையான வைப்புத் தொகை போன்றவற்றை தொடங்கும்போது நாமினி நியமிப்பதுபோல, நகைக் கடன் பெறும்போதும் நாமினியை நியமிக்க வேண்டும்.

இதன்மூலம், கடன்தாரர் இறந்தாலும், எவ்வித சிக்கலும், சிரமமும் இன்றி நாமினியால் நகைக் கடனை அடைத்து நகையைதிரும்பப் பெற முடியும். வங்கித் தரப்பிலும் பணிச் சுமை குறையும். இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி உரிய விதிமுறையை வகுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுபற்றி வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ரிசர்வ் வங்கிவகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றியே வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. குறிப்பாக, நகைக் கடன்களுக்கு நாமினி நியமிக்கும் வசதியை ரிசர்வ் வங்கி இதுவரை வழங்கவில்லை. எனினும்,

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் கவனத்துக்கு கொண்டு சென்று, இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x