

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்ற விதியை திருத்தம் செய்யும் மத்திய அரசின் முடிவை கைவிட வேண்டும் என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: மாநிலங்களில் பணியாற்றி வரும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மாநில அரசின் ஒப்புதல் பெறாமல் பணியிட மாற்றம் செய்யும் வகையில் மத்திய அரசு விதிகளைத் திருத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை அப்பட்டமான அதிகார அத்து மீறலாகும். கூட்டாட்சி கோட்பாட்டை தகர்க்கும்செயலாகும்.
மாநில மக்களால் தேர்வு செய்யப்பட்டு அமைக்கப்படும் சட்டப்பேரவைகள் மற்றும் அமைச்சரவைகளின் அதிகாரத்தையும் பறிக்கும் எதேச்சதிகார முறையாகும். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மாநிலங்களை சீர்குலைக்கும் மத்திய அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
அமமுகபொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை மாநில அரசின் இசைவின்றியே எப்போது வேண்டுமானாலும் மத்திய பணிக்கு அழைத்துக் கொள்ளும் வகையில் மத்திய அரசு விதிகளைத் திருத்தப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இப்படி ஒரு முடிவெடுக்க மத்திய அரசு தீர்மானித்திருந்தால், அதனைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால், மாநிலங்களில் பெரிய நிர்வாக சீர்குலைவு ஏற்படுவதுடன், மத்திய - மாநில அரசுகளின் உறவும் சிக்கலாகிவிடும்.
விசிக தலைவர் திருமாவளவன்: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பணி விதிகள் 1954-ம்ஆண்டில் உருவாக்கப்பட்டன. மாநில அரசுகளின்கீழ் பணியாற்றும் இந்த அதிகாரிகளை மத்திய அரசுப் பணிகளுக்கு அழைப்பது என்றால் மாநில அரசின் சம்மதத்தோடு அதைச் செய்து கொள்ளலாம் என இந்திய ஆட்சிப் பணி விதிகள் 1954-ல் விதி 6-ல் குறிப்பிடுகிறது.
இதுவரை அதுவே நடைமுறையில் உள்ளது. ஆனால் இப்போது மாநில அரசு ஒப்புதல் இல்லாமலேயே மத்திய அரசு இந்த அதிகாரிகளை மத்திய அரசுப்பணிக்கு அழைத்துக் கொள்ளலாம் என வித 6-ல் திருத்தம் செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: மாநிலங்களில் பணிபுரியும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளை தேவைப்படும்போது, மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசின் பணிகளுக்கு அழைத்துக் கொள்ளும் அதிகாரத்தை 1954-ன் இந்திய ஆட்சிப் பணி விதி 6-ன் புதிய திருத்தம் வழங்குகிறது. மத்திய அரசு நடைமுறைப்படுத்த நினைக்கும் இந்தப் புதிய திருத்தம் மாநில அரசின் உரிமைக்கு முற்றிலும் எதிரானது. மத்திய அரசின் இந்த முடிவு மாநிலங்களின் நிர்வாகத்தைக் கடுமையாகப் பாதிக்கும். எனவே, இந்திய ஆட்சிப் பணி விதி 6-ல் திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.
தமிழக வாழ்வுரிமை கட்சிதலைவர் வேல்முருகன்: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு எடுத்துக் கொள்வதற்கு மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்ற விதியை ரத்து செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசுகளின் அதிகாரத்தை இது பறிப்பதோடு, கூட்டாட்சி தத்துவத்துக்குஎதிராக உள்ள அதிகாரிகளை மாற்றும் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்திஉள்ளனர்.