Published : 10 Apr 2016 10:19 AM
Last Updated : 10 Apr 2016 10:19 AM

வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் திருப்தி அளிக்கின்றன: தேர்தல் பார்வையாளர் அல்பனாபந்த் சர்மா தகவல்

சென்னை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் விழிப்புணர்வுப் பணிகள் திருப்திகரமாக உள்ளன என்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கான தேர்தல் பார்வையாளர் (விழிப்புணர்வு) அல்பனாபந்த் சர்மா தெரிவித்துள் ளார்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் 100 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம், விழிப்புணர்வு மற்றும் 18 வயது நிறைவடைந்தோரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது போன்ற பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அவை முறையாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க, தனி தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ஒரு தேர்தல் பார்வையாளர் வீதம் 16 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அல்பனா பந்த் சர்மா பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.ரிப்பன் மாளிகையில் இயங்கி வரும் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு நேற்று வந்த அவர், தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக கண்காணிப்பு மையம் ஆகியவற்றை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்தரமோகன், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் (விழிப்புணர்வு) மு.ஆசியா மரியம், மற்றொரு கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் கு.கோவிந்தராஜ் மற்றும் சென்னை மாவட்டத்திலுள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வரும் தேர்தல் அலுவலர்களை சந்தித்து, அனைத்து தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் விழிப்புணர்வுப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அவர் ‘தி இந்து’ நிருபரிடம் கூறும்போது, “சென்னை மாவட்டத்தில் மேற்கொண்டு வரும் வாக்காளர் விழிப்புணர்வுப் பணிகள் திருப்திகரமாக உள்ளன. நான் அனைத்து தொகுதிகளிலும் நடைபெற்று வரும் விழிப்புணர்வுப் பணிகளை பார்வையிட சென்றுகொண்டு இருக்கிறேன்” என்றார்.

இவர் மொத்தம் 3 நாட்கள் சென்னை மாவட்டத்தில் ஆய்வு செய்ய உள்ளார். அதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் 3 நாட்கள் விழிப்புணர்வுப் பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x