

மதுரையில் அதிமுக அரசு கொண்டு வந்துள்ள பெரும்பாலான திட்டங்களைத்தான் முதல்வர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:
மதுரைக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவை வெறும் அறிவிப்புடன் நின்றுவிடக் கூடாது. மத்திய அரசு அல்லது உலக வங்கி என யாரிடமிருந்து நிதியை பெற்று திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்பதை முதல்வர் தெரிவிக்க வேண்டும்.
தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் மதுரையில் 4 வெளி வீதிகளிலும் உயர்மட்ட பறக்கும் பாலம் அமைக்கப்படும் என்றார். இது குறித்து முதல்வர் அறிவிப்பில் எந்த தகவலும் இல்லை. முதல்வர் அறிவிப்பில் பெரும்பாலான திட் டங்கள் அதிமுக அரசு கொண்டு வந்தவையாகத்தான் உள்ளன
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது அறிவித்தாலும் சந்திப்போம். மக்கள் எங்கள் பக்கம். அவர்களே நீதிமான்கள்.
பொங்கல் பரிசு பொருட்களில் தரமில்லை என்பதை முதலிலேயே பார்த்திருக்க வேண்டும் என முதல்வரே தெரிவித்துள்ளார். ஆனால் அத்துறையின் அமைச்சர் வேறு மாதிரி பேசுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.