

தருமபுரியில் நேற்று நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தின்போது கோஷ்டி தகராறு காரணமாக அமைச்சர் பழனியப்பனைத் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரியில் நேற்று, மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் போட்டியிடும் 5 வேட்பாளர்களும் தங்களை அறிமுகம் செய்துகொண்டு பேசி முடித்தனர்.
அதைத் தொடர்ந்து கட்சியின் தலைமை நிலையச் செயலாளரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான பழனியப்பன் பேசினார். அப்போது, கூட்டத்தில் ஆங்காங்கே எழுந்து நின்ற சிலர், பழனியப்பன் பேச ஆட்சேபம் தெரிவித்ததுடன், கூச்சல் ஏற்படுத்தினர். சலசலப்பு அதிகரித்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் மேடையை நோக்கி சேர்களை தூக்கிக்கொண்டு பாய்ந்ததால் பரபரப்பு அதிகரித்தது.
இதையடுத்து மாவட்டச் செயலாளர் கே.பி.அன்பழகன் அவர் களை சமாதானப்படுத்த முயன்றார். கூச்சலில் ஈடுபட்டவர்களை மண்டபத்தை விட்டு வெளியேற்றினர். தொடர்ந்து சில நிமிடங்கள் பழனியப்பன் பேசி முடித்தார்.
அவர் பேசி முடித்தவுடன் முன்னாள் நகரச் செயலாளர் ரவி, ‘பழனியப்பன் அமைச்சர் ஆவதற்கு முன் தனக்கிருந்த சொத்து பற்றியும், தற்போது இருக்கும் சொத்து பற்றியும் வெளிப்படையாக தெரிவிப்பாரா? இவரால் 10-க்கும் மேற்பட்டவர்கள் தருமபுரி மாவட்ட அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்’ என்றார்.
அப்போதும் மண்டபத்தின் உள்ளே பதற்றமான சூழல் நிலவியதால் அமைச்சர் பழனியப்பன் அங்கிருந்து கிளம்பினார். அவரது ஆதரவாளர்களும், நடுநிலையாளர்களும் தாக்குதல் சம்பவம் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக அவரை சூழ்ந்து சென்று காரில் ஏற்றிவிட்டனர். இதைத் தொடர்ந்து கூட்டமும் பாதியில் ரத்து செய்யப்பட்டு அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்.
தருமபுரி அதிமுகவில் மாவட்டச் செயலாளர் கே.பி.அன்பழகன் அணி, அமைச்சர் பழனியப்பன் அணி, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி அணி என 3 அணிகள் உள்ளன. இந்த அணிகளுக்கு இடையிலான உரசல்கள் தேர்தல் நேரத்தில் வெளிப்படையான மோதல்களாக உருவெடுத்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி சிலர் கூறும்போது, ‘தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இதுபோன்ற மோதல்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கை குறைக்கும். கட்சிக்குள் விபரீத நிகழ்வுகளாகக் கூட முடியக்கூடும். எனவே இந்த விவகாரத்தில் அதிமுக தலைமை உடனடியாக கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்றனர்.