Published : 23 Jan 2022 08:19 AM
Last Updated : 23 Jan 2022 08:19 AM

வி.எம். சத்திரத்தில் பாழ்படும் நீராதாரம்: இயற்கை ஆர்வலர்கள் கவலை

திருநெல்வேலி அருகே வி.எம். சத்திரத்திலுள்ள பீர்க்கன்குளம் பாழ்படுத்தப்படுவது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த மழையால் பெரும்பாலான குளங்கள் பெருகியிருக்கின்றன. இதனால் பிசான சாகுபடியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி மாநகரில் வேய்ந்தான்குளம், நயினார்குளம் உள்ளிட்ட குளங்களில் நீர்பெருகி இருப்பது குடியிருப்பு வாசிகளுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த குளங்களில் குப்பைகளை கொட்டி பாழ்படுத்துவது இயற்கை ஆர்வலர்களை கவலை கொள்ளச் செய்துள்ளது.

வி.எம். சத்திரத்திலுள்ள பீர்க்கன்குளத்தில் குப்பைகளை கொட்டி பாழ்படுத்தும் செயல் அதிகரித்துள்ளது. அருகிலுள்ள மூர்த்தி நயினார்குளம் நிரம்பி அங்கிருந்து தண்ணீர் வழிந்தோடி இந்த குளத்துக்கு வந்து சேருகிறது. சமீபத்தில் பெய்த தொடர் மழையால் இந்த இரு குளங்களிலும் பெருமளவுக்கு நீர் பெருகியிருக்கிறது. 19.7 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள பீர்க்கன்குளத்தை சுற்றிலும் குடியிருப்புகள் பெருகி வருகின்றன. இதனால் குளத்தை பாழ்படுத்துவதும் வேகமெடுத்துள்ளது. அருகிலுள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், உணவகங்களில் இருந்து கழிவுகளையும், குப்பைகளையும் வாகனங்களில் எடுத்துவந்து இந்த குளத்தின் கரைகளில் கொட்டிவிட்டு சென்றுவிடுகிறார்கள். இதனால் குளத்தின் சுற்றுச்சூழல் மாசுபட்டுள்ளது.

இது குறித்து வி.எம். சத்திரம் மேம்பாட்டு அமைப்பை சேர்ந்தவர்கள் கூறும்போது, “இந்த குளங்களில் நீர் பெருகியிருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் திருநெல்வேலி மாநகர விரிவாக்க பகுதிகளில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், குளத்தில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க முடியவில்லை. இரவு நேரங்களில் வாகனங்களில் குப்பைகளையும், கட்டிட கழிவு களையும் அள்ளி எடுத்துவந்து கரையில் கொட்டிவிட்டு சென்றுவி டுகிறார்கள். இதுகுறித்து விழிப்பு ணர்வு பதாகைகள் வைத்தும், விழிப்புணர்வு வாசகங்களை எழுதிவைத்தும் பயனில்லை. பொதுமக்களுக்கு பொறுப்புணர்வு வரவேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x