

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் தற்போது உப்பு உற்பத்தி கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ள போதிலும், போக்குவரத்து வசதி குறைவு காரணமாக அதிக அளவில் உப்பு தேங்குவதால் உப்பு உற்பத்தியாளர்கள் பெரிதும் வேதனையில் உள்ளனர்.
தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் இரண்டாம் இடம் வகிக்கிறது. அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் பகுதிகளில் 12 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தத் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஜனவரி முதல் அக்டோபர் வரை இங்கு உற்பத்தி நடைபெறுகிறது. ஓராண்டுக்கு 4.5 லட்சம் டன் முதல் 6 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு உப்பு உற்பத்திக்கு சாதகமான பருவநிலை உள்ளதால் உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் 4 லட்சம் டன் உப்பு உற்பத்தியாகியுள்ளது.
முழுவீச்சில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டும், அவற்றை வெளியில் அனுப்பி வைக்க போக்குவரத்து வசதி போதுமானதாக இல்லை. உப்பை அனுப்பி வைக்க முழுக்க முழுக்க லாரி போக்குவரத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு உப்பை அனுப்பி வைக்க போதிய லாரிகள் இல்லை.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை, அகஸ்தியம்பள்ளியிலிருந்து திருத்துறைப்பூண்டி வரை ரயில் போக்குவரத்து இருந்ததால், ரயில் மூலம் உப்பு அனுப்பி வைக்கப்பட்டது. அதனால் உப்பு தேங்கவில்லை. ஆனால், அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் தற்போது லாரிகளை மட்டுமே நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உப்பு விலை அடிக்கடி வீழ்ச்சியடைந்து, உற்பத்தியாளர்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படுகிறது. தற்போது, ஒரு டன் உப்பு ரூ.300 முதல் ரூ.450 வரை விற்பனையாகிறது. உற்பத்தி செலவுக்குக்கூட விலை கட்டுபடியாகவில்லை என உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
“இந்த தடத்தில் அகல ரயில் பாதை பணிக்காக பாலம் அமைக்கும் பணி, கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணி மந்தமான நிலையில் நடைபெற்று வருகிறது. எனவே, பணியை வேகமாக முடித்து, அகல ரயில் பாதை திட்டத்தை விரைவாக நிறைவேற்றினால்தான், உற்பத்தியாகும் உப்பை விரைவாக சந்தைப்படுத்த முடியும். எனவே, மத்திய அரசு அகல ரயில் பாதை திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும்” என்கின்றனர் உப்பு உற்பத்தியாளர்கள்.
இவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அகலப் பாதை பணியை விரைந்து முடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.