

திருவண்ணாமலை அடுத்த நாயுடுமங்கலத்தில் வன்னியர் சங்கத்தின் சின்னமான அக்னி குண்டத்தை அதிகாரிகள் அகற்ற முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அருகே நாயுடுமங்கலம் கூட்டுச்சாலையில் வன்னியர் சங்க சின்னமான அக்னி குண்டம் (கலசம்) கடந்த 1989-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறுவப்பட்டுள்ளது. இதனை, பாமக நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்துள்ளார். இந்நிலையில், சாலை விரிவாக்கம் மற்றும் பேருந்து நிறுத்தம் பணிக்கு தற்காலிகமாக அகற்றப்பட்ட அக்னி குண்டம், பின்னர் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் அருகே மீண்டும் நிறுவப்பட் டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆட்சியர் பா.முருகேஷிடம் முறையிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு கருதி, வன்னியர் சங்க சின்னமான அக்னி குண்டத்தை அகற்ற ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும், காவல்துறை பாதுகாப்புடன் அக்னி குண்டத்தை அகற்றும் முயற்சியில் வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர்.
இதையறிந்த பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர், அக்னி குண்டம் முன்பு திரண்டனர். வன்னியர் சங்கத்தின் அக்னி குண்டத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் கோட்டாட்சியர் வெற்றிவேல், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜகாளீஸ்வரன் மற்றும் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், திருவண்ணா மலை – வேலூர் தேசிய நெடுஞ் சாலையில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறும் போது, “நாங்கள் புதிதாக அக்னி குண்டத்தை நிறுவவில்லை. ஏற்கெனவே நிறுவப்பட்டிருந்ததை, சாலை விரிவாக்கப் பணிக்கு தற்காலிகமாக அகற்றிக் கொண்டு, அரசு அதிகாரிகள் தெரிவித்த இடத்தில் மீண்டும் வைத் துள்ளோம். சட்டப்படி அக்னி குண்டத்தை அகற்றுகிறோம் என்கிறார்கள். அப்படி என்றால், நெடுஞ்சாலையில் உள்ள தலைவர் களின் சிலைகள் மற்றும் கட்சி கொடி கம்பங்கள் அனைத்தையும் அகற்றினால், நாங்களும் அகற்றிக் கொள்கிறோம்” என்றனர்.
இது தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என அதிகாரிகள் கூறியதை அடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.