Published : 22 Jan 2022 06:59 AM
Last Updated : 22 Jan 2022 06:59 AM

பொங்கல் தொகுப்பு குளறுபடி குறித்து முறையாக தகவல் தெரிவிக்கவில்லை: அரசு அதிகாரிகள் மீது முதல்வர் ஸ்டாலின் கடும் அதிருப்தி

சென்னை: பொங்கல் தொகுப்பு கொள்முதலில் ஊழல் புகார் எழுந்துள்ள நிலையில், குளறுபடிகள் குறித்து முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்று அரசு அதிகாரிகள் மீது முதல்வர் ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

தமிழகத்தில் பொங்கலை முன்னிட்டு, 2 கோடியே 15 லட்சத்து67,114 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், 18,946 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு ரூ.1,297 கோடி மதிப்பில் கரும்பு மற்றும் பொங்கல்தொகுப்பு பை உட்பட 21 பொருட்களை வழங்க தமிழக அரசு திட்டமிட்டது. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு பொருட்கள் வாங்கப்பட்டன. கரும்பை பொறுத்தவரை விவசாயிகளிடமே நேரடியாக கொள்முதல் செய்யப்பட வேண்டும். ஒரு கரும்பு ரூ.33 என்ற அடிப்படையில், 6 அடி உயரத்தில் சராசரிதடிமன் உள்ளதாக இருக்க வேண்டும். கரும்பை வெட்டிக் கொடுக்கக்கூடாது என்று பல்வேறு அறிவுறுத் தல்கள் வழங்கப்பட்டன.

பொங்கல் பையை பொறுத்தவரை ஒப்பந்ததாரர் மூலம், சிவகாசி, திருப்பூர், பவானி பகுதிகளில் உள்ள பை தயாரிப்பாளர்களுக்கு 2.16 கோடி பை தயாரிக்கும் பணி பிரித்தளிக்கப்பட்டது. இதில், மகளிர் சுய உதவிக்குழுக்களும் இடம்பெற்றிருந்தனர்.

இதையடுத்து ஜன.4-ம் தேதிபொங்கல் தொகுப்பு வழங்கும்பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து,தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் இப்பணி தொடங்கியது. விநியோகம் தொடங்கியதுமே, முதலில் பை பற்றாக்குறை தகவல்வெளியானது. அப்போது, கரோனாகாரணமாக மகளிர் சுய உதவிக்குழுக்களால் குறிப்பிட்ட காலத்தில்பையை தயாரித்து தர இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள்பைகளில் வாங்கிக் கொள்ளும்படியும், அதன்பின் பை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பொருட்கள் தரம் குறித்து புகார்

பொங்கல் பை பிரச்சினை அடங்கிய நிலையில், அடுத்ததாக, பொங்கலுக்கு கொடுக்கப்பட்ட வெல்லம் உருகியதாகவும், புளியில் பல்லி இருந்ததாகவும் சர்ச்சைகள் கிளம்பின. இவை அனைத்தும் பொய்புகார்கள் என உணவு அமைச்சர் தரப்பில் கூறப்பட்டது. இருப்பினும், பொருட்கள் விநியோகத்தில் பொருட்களின் தரம், எடை குறித்தும் பொதுமக்கள் குமுறும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவின. இதையடுத்து முதல்வரேநேரடியாகச் சென்று பொருட்கள் விநியோகத்தை ஆய்வு செய்தார்.அமைச்சர்கள், அதிகாரிகளை கண்காணிக்கும்படியும் உத்தரவிட்டி ருந்தார்.

இருப்பினும், பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வந்தன. தற்போது, பொங்கல் தொகுப்பு பெறாதவர்கள் ஜன.31 வரை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொருட்கள் பெறச் சென்றவர்களுக்கு பொருட்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாகவும், கரும்பு கிடைக்கவில்லை என்றும் புகார் தெரிவித்து வரு கின்றனர்.

ஆலோசனைக் கூட்டம்

இந்தச் சூழலில் எதிர்க்கட்சித்தலைவர் கே.பழனிசாமி பொங்கல் தொகுப்பு விநியோகத்தில் ரூ.500 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக நேற்று குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டு பொய்யானதுஎன்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார். இருப்பினும், ஏற்கெனவே கரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் ரொக்கம் மற்றும்14 பொருட்கள் அடங்கிய தொகுப்பு விநியோகத்தின் போது எந்த பிரச்சினையும் ஏற்படாத நிலையில்,இந்த திட்டத்தில் இவ்வளவு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, நேற்று காலை 11 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதிகாரிகள் மீது அதிருப்தி

அப்போது, பொங்கல் பை ஒப்பந்தம், விநியோகத்தில் ஏற்பட்டபிரச்சினை, பொருட்கள் கொள்முதலில் வரும் புகார்கள், தரம் குறைந்தபொருட்கள் திருப்பியனுப்பப்பட்டது, புதிய பொருட்கள் பெறப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது, பல்வேறுதகவல்கள் தனக்கு தெரிவிக்கப்படாதது குறித்து முதல்வர் அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்தே, ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் விநியோகத்தில் குழப்பம் செய்தவர்கள், பொருட்களை தரமில்லாமல் வழங்கியவர்கள், பொங்கல் பை வழங்கியவர்கள் என ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் இந்த உத்தரவு அரசுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x