

சென்னை: பொங்கல் தொகுப்பு விநியோகத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கறுப்பு பட்டியலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு ரூ.1,297 கோடி மதிப்பில் முழு கரும்பு உள்ளிட்ட 21 பொருட்களுடன் பொங்கல் பரிசுத் தொகுப்புவழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை ஜனவரி 4-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நியாயவிலைக் கடைகளில் மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது.முதலில் பொங்கல் தொகுப்புக்கான பைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால், மக்கள் தாங்களே பைகளை எடுத்துச் சென்று பொருட்களை பெற்றனர்.
அதைத் தொடர்ந்து, பொங்கல் தொகுப்பு பொருட்களின் தரம் குறித்த சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை ஆகியோர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தனர்.
பொங்கல் தொகுப்பு பொருட்கள் கொள்முதலில் ரூ.500 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டு தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டு தவறானது என்றும், இதுபற்றி நேரில் விவாதிக்கத் தயாரா என்றும் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி கேள்வி எழுப்பியிருந்தார். பொங்கல் பொருட்கள் கொள்முதல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி ஓபிஎஸ் நேற்று அறிக்கை வெளியிட்டார்.
முதல்வர் ஆலோசனை
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடந்தது.இதில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பிறகு தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள குடும்பத்தினர் என மொத்தம் 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,296.88 கோடி செலவில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
பொங்கல் பரிசுப் பொருட்கள் அனைத்தும் முறையாக திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி மூலம், சரியான விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டன. கடந்த ஆட்சிக்காலத்தில் 6 பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டில் 21 பொருட்கள் கொள்முதல் செய்து வழங்கப்பட்டன. மேலும்,தற்போது வழங்கப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை மட்டுமல்லாமல், அவை கூடுதல் எடையில் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் நல்ல முறையில் நடந்திருந்த நிலையில், ஒருசில பகுதிகளில் சில நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட பொருட்களில் குறைபாடுகள் இருந்ததாக அரசுக்கு புகார்கள் வந்தன. அவற்றை விசாரித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. உரிய தரத்துடன் பொருட்களை வழங்கத் தவறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து பரிசுத் தொகுப்பு விநியோகம் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், பொங்கல் பரிசுப் பொருட்கள் கொள்முதல் மற்றும் விநியோகத்தின்போது துறையால் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்து அலுவலர்கள் விளக்கினர். மேலும், தரக் கட்டுப்பாடு குறித்த விவரங்களும் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
விரிவான ஆய்வுக்கு பிறகு முதல்வர் அறிவுறுத்தியதாவது: பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் வரக் காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீது கறுப்புப் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட தேவையான கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு அனைத்து வகையிலும் தரமான பொருட்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க இயலாது.
மேலும், நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் எப்போதும் தரமானதாகவும், உரிய எடையிலும் விநியோகம் செய்யப்படுவதை அந்தந்த பகுதிகளில் உள்ள அரசுஅலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
தவறு செய்வோர் யாராகஇருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்வரின் அறிவுறுத்தலை தொடர்ந்து, பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் தவறு செய்தவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| நாளை முழு ஊரடங்கு தமிழகத்தில் கரோனா, ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த ஜன.6-ம் தேதி முதல் வரும் 31-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த இரண்டு வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த வாரமும் ஞாயிற்றுக்கிழமை (நாளை) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கரோனா, ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் நலன் கருதி வரும் ஜன.23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். முழு ஊரடங்கு நாளில் அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும். மற்ற செயல்பாடுகளுக்கான தடை தொடரும். வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும். மாவட்ட ரயில் நிலையங்கள், வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும். கரோனா தொற்றில் இருந்து மக்களை காத்திட அரசு மேற்கொள்ளும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார். |