

சென்னை: கரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய வழக்கைவரும் 24-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
‘கரோனா 3-வது அலை உச்சத்தில்உள்ள சூழலில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது. தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்’ என்று கோரி தமிழக அரசின் ஓய்வு பெற்ற மருத்துவ இணை இயக்குநர் மருத்துவர் நக்கீரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வில் இந்த வழக்குவிசாரணை நேற்று நடந்தது.
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தேர்தல் அறிவிப்பாணையை ஜன.27-க்குள் வெளியிட உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதே எனகேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த பிரபாகரன், மாநில சூழலை பொருத்து தேர்தல் வழக்கை விசாரிக்கஉச்ச நீதிமன்றம் 2012-ம் ஆண்டே அனுமதி அளித்துள்ளது என்றார்.
மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.சிவசண்முகம் ஆஜராகி, உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் தொடர்பான அறிவிப்பை 4 மாதத்தில் வெளியிடுவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அவகாசம் ஜன.27-ம் தேதியுடன் முடிகிறது. முழுபாதுகாப்பு நடைமுறைகளுடன் தேர்தல் நடத்தப்படும் என்றார். மற்றொரு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏஆர்எல் சுந்தரேசனும் தேர்தலை தள்ளிவைக்க கோரினார்.
இதன் அடுத்த விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். இந்த இடைப்பட்ட காலத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியிட இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் விடுத்த கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.