

தெருக்கூத்து என்பது கிராமங்களில் திறந்தவெளியில் நாட்டுப்புறக் கலைஞர்களால் நடத்தப்படும் ஒரு கலை. பழமை வாய்ந்த கலையின் அடையாளமாக விளங்கும் தெருக்கூத்து, நாட்டுப்புற மக்களின் கலை நயத்தை வெளிப்படுத்துகிறது. மக்களுக்கு தெரிந்த கதைகள், தெரியாத வரலாறுகள், நீதி போதனைகள் என பல்வேறு விஷயங்கள் தெருக்கூத்து வாயிலாக மக்களிடம் தெரிவிக்கப்படுகிறது. கிராமங்களில் பண்டிகை நாட்களில் பல்வேறு தலைப்புகளில் நடத்தப்படும் தெருக்கூத்துகளால், இக்கலைகள் இன்னும் உயிர்ப்போடு இருக்கின்றன.
இவ்வாறு புகழ் பெற்ற தெருக்கூத்துக் கலையை, தங்களது வாழ்வின் ஓர் அங்கமாக, நோய் தீர்க்கும் மருந்தாகக் கருதி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள வெள்ளிக்குப்பம்பாளையம் கிராம மக்கள் கடந்த இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து வரும் வாரத்தில் நடத்தி வருகின்றனர். அதன்படி, சமீபத்தில் தெருக்கூத்து நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக, கிராம மக்கள் கூறும்போது,‘‘மேட்டுப்பாளையம் தாலுகாவுக்குட்பட்ட வெள்ளிகுப்பம்பாளையம், பகத்தூர், மூலத்துறை, கிச்சகத்தியூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில், ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்பு, காலரா, கொள்ளை நோய் எனப்பட்ட ‘பிளேக்’ போன்ற நோய்கள் மக்களிடம் பரவி பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. வீடு தோறும் உயிரிழப்புகள் ஏற்பட்ட அக்காலகட்டத்தில் மக்களுக்கு நம்பிக்கையும் ஆறுதலையும் அளிக்கும் வகையில் ‘இரண்ய நாடகம்’ தெருக்கூத்து இங்கு நடத்தப்பட்டது. அதில், பக்த பிரகலாதனின் கோரிக்கையை ஏற்று திருமால் நரசிம்ம அவதாரத்தில் தூணில் இருந்து வெளிவந்து தீமையின் அடையாளமான இரண்யனை அழிப்பதாக கூறும் கருத்தால், அன்று தங்களது ஊரை பிடித்த பிணி மெல்ல மெல்ல விலகி மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் திரும்பியதாக நம்பப்படுகிறது. எனவே, அன்று முதல் இன்று வரை பல தலைமுறைகளாக பொங்கல் பண்டிகை சமயத்தில் தொடர்ந்து தெருக்கூத்து நாடகத்தை, எங்களது ஊரின் நோய் தீர்க்கும் மருந்தாக கருதி நாங்கள் நடத்தி வருகிறோம். முன்பு, கிராமத்தின் மையப்பகுதியில், மாலை தொடங்கி மறுநாள் காலை வரை விடிய விடிய ‘இரண்ய நாடகம் தெருக்கூத்து’ நடத்தப்படும். முழுக்க முழுக்க உள்ளூர் கிராமத்தினரே இத்தெருக்கூத்தில் வேடமிட்டு நடிப்பர். தெருக்கூத்து நடக்கும் நாளில் அனைவரும் பங்கேற்று விடுவர். ஆனால், நடப்பாண்டு கரோனா பரவல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், வெள்ளிக்குப்பம்பாளையத்தில் உள்ள அம்மன் கோயில் முன்பு காலை தொடங்கி இரவுக்குள் இரண்ய நாடகம் தெருக்கூத்து நடத்தி முடிக்கப்பட்டது’’ என்றனர்.