

தேர்தல் களத்தில் ஒவ்வொரு கட்சியில் வித்தியாசமான தொண்டர்களைக் காண முடியும். அந்த வகையில் போயஸ் தோட்டத்திற்கு சென்றால் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு அருகே பச்சை சட்டை, பச்சை பேண்ட் போட்டுக் கொண்டு ஒருவர் பரபரப்பாக அங்கிருப்பவர்களோடு பேசிக் கொண்டிருந்தார்.
அவரிடம் பேசினால் நமக்கு ஆச்சரியங்களே பரிசாக கிடைத்தன. "என் பெயர் பழனிகுமார். அதிமுகவில் 10 ஆண்டுகளாக இருக்கிறேன். ஆனால், விவரம் தெரிந்து சேர்ந்தது 6 ஆண்டுகளுக்கு முன்பு தான். சைக்கிளிலேயே அதிமுகவிற்கு பிரச்சாரம் செய்வேன். அம்மாவைப் பார்த்த விஷயங்கள் எல்லாம் தலைமைக் கழகத்தின் கோப்புகளில் இருக்கிறது. சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தேன்.
என்னுடைய தாய், தகப்பன் எல்லாம் நான் மனநிலை சரியில்லாதவன் என்று அரசு மருத்துவமனையில் கொண்டுப் போய் சேர்த்துவிட்டார்கள். அப்போது அமைச்சர் மூலமாக கடிதம் வாங்கி போய் மூலத்திற்கு அறுவை சிகிச்சை செய்தேன். அன்று தான் இனிமேல் எனக்கு எல்லாமே அம்மா தான் என்று முடிவு பண்ணினேன். பணத்துக்காக எல்லாம் நான் கட்சியில் சேரவில்லை. என் உயிரை அம்மா காப்பாற்றிவிட்டார்கள். அந்த உயிர் இருக்கும் வரை அம்மாவிற்காக பிரச்சாரம் செய்வேன்.
ஏற்காடு, ஸ்ரீரங்கம், ஆர்.கே.நகர் உள்ளிட்ட ஏரியாக்களில் எல்லாம் பிரச்சாரம் செய்திருக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்திற்குப் போனேன். தற்போது சட்டப்பேரவைத் தேர்தலிலும் தமிழ்நாடு முழுவதும் போக தலைமைக் கழகத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறேன். அனுமதி கிடைத்ததும் கிளம்பிவிடுவேன்” என்றார்.
"அம்மா ஜெயலில் இருந்த போது 15 நாட்களாக சாப்பிடாமல் போயஸ் கார்டனில் படுத்திருந்தேன். அம்மா விடுதலை பெற்று மீண்டும் முதலமைச்சராக வருவார் என்று தெரியும். அம்மா பதவியேற்ற உடன் தான் இங்கிருந்து கிளம்பி போனேன்" எனத் தெரிவித்தார்.
அவ்வளவு அமைதியாக பேசுபவர் குடும்பத்தினர் தற்போது பேசுகிறார்களா என்றவுடம் கோபமாக "நான் என் குடும்பத்தை விட்டுப் பிரிந்து 10 வருடங்கள் ஆகிறது. எனக்கு எந்த ஒரு உறவும் கிடையாது. அம்மா ஜெயலலிதா மட்டுமே" என்று தெரிவித்தார்.