

விருதுநகரில் மேம்பாலத்தின் தடுப்புச் சுவர் மீது லாரி மோதியது. இதனால் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நோட்டுப் புத்தகங்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று திருநெல்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. லாரியை பெரம்பலூர் அருகே உள்ள ஆத்தூரைச் சேர்ந்த செல்வகுமார்(39) என்பவர் ஓட்டி வந்தார். லாரி உரிமையாளர் திருச்சி லால்குடியைச் சேர்ந்த முருகானந்தமும் உடன் வந்தார்.
விருதுநகர்-சாத்தூர் நான்குவழிச் சாலையில் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே நேற்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் வந்தபோது லாரியின் முன் பக்க இடது சக்கரம் வெடித்தது. இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ரயில்வே மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் செல்வகுமார், முருகானந்தம் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பாலத்தின் தடுப்புச் சுவரில் சக்கரம் சிக்கியதால் அதிர்ஷ்டவசமாக லாரி கீழே கவிழ்ந்துவிடவில்லை. இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
பஜார் போலீஸார் மற்றும் ரயில்வே அதிகாரிகள், ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மதுரையில் இருந்து சாத்தூர் வழியாகச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் விருதுநகர் புதிய பேருந்து நிலையம் வழியாக திருப்பிவிடப்பட்டன.
அதைத் தொடர்ந்து சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு ரயில் நேற்று காலை 6.15 மணிக்கு விருதுநகர் வந்தது. 15 நிமிட தாமதத்துக்குப் பிறகு ரயில் 10 கி.மீ. வேகத்தில் விபத்து நடந்த பாலத்தை கடந்து சென்றது. அதைத் தொடர்ந்து, மதுரையில் இருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயில் விருதுநகர் ரயில் நிலையத்திலும், செங்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் ரயில் சிவகாசியிலும் நிறுத்தப்பட்டது.
இதனால், வெறுப்படைந்த பயணிகள் ரயில் நிலைய அதிகாரிகளை முற்றுகையிட்டனர். எனவே விருதுநகர், சிவகாசி ரயில் நிலையங் களில் பரபரப்பு ஏற்பட்டது. கல்லூரி மாணவ, மாணவிகளும், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிலாளர்கள் அனைவரும் பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
லாரியை 3 கிரேன்கள் உதவியுடன் மீட்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், லாரியில் அதிக எடை இருந்ததால் மீட்புப் பணிகள் தொய்வடைந்தன. அதையடுத்து, மதுரையில் இருந்து ரயில்வேக்குச் சொந்தமான ராட்சத கிரேன் பிற்பகலில் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்றன. ஆனாலும் சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு லாரி மீட்கப்பட்டது.