Published : 22 Jan 2022 11:14 AM
Last Updated : 22 Jan 2022 11:14 AM

பனமரத்துப்பட்டியில் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி; ஒன்றியக் குழு தலைவர் பதவியை இழந்தது அதிமுக: ஆட்சியர் அலுவலகம் முன்பு எம்எல்ஏக்கள் தர்ணா

சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் அக்கட்சியினர்.

சேலம்

பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக ஒன்றியக்குழு தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதையடுத்து தலைவர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 13 வார்டுகள் உள்ளன. அதிமுக-வைச்சேர்ந்த ஜெகநாதன், ஒன்றியக்குழு தலைவராக இருந்து வந்தார். ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில், 8 கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு தடைவிதிக்க வேண்டும் என தலைவர் ஜெகநாதன் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து நேற்று பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுக ஒன்றியக்குழு தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதில், 10 கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து தீர்மானம் வெற்றியடைந்த நிலையில், ஜெகநாதன் ஒன்றியக்குழு தலைவர் பதவியை இழந்தார். இப்பதவி காலியிடமாக அறிவிக்கப்பட்டு, விரைவில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முன்னதாக, அதிமுக கவுன்சிலர்களான சங்கீதா, பூங்கொடி ஆகியோரை திமுகவினர் கடத்தியதாகக் கூறி, ஒன்றியக்குழுத் தலைவர் ஜெகநாதன், அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜாமுத்து, ஜெயசங்கரன், சுந்தர்ராஜன், நல்லதம்பி ஆகியோர் சேலம் ஆட்சியர் அலுவலகம் எதிரில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனிடையே கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 2 பெண் கவுன்சிலர்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

மேலும், தங்களை யாரும் கடத்தவில்லை என்றும், விருப்பதின் பேரில் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளித்ததாகவும் கூறினர். இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ-க்களை போலீஸார் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x