

சென்னை: தமிழகம் முழுவதும் தனியார் வசமிருந்த வன்னியர் அறக்கட்டளைகளுக்கு சொந்தமான 118 சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.100 கோடிக்கு மேலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வன்னியர் சமுதாயத்தினரின் முன்னேற்றத்துக்காக வன்னிய வள்ளல்களால் உயிலாக எழுதி வைக்கப்பட்ட அறக்கட்டளைகளை அடையாளம் கண்டு ஒருங்கிணைத்து, அவை உருவாக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்ற வழிவகைகளை கண்டறிவதற்காக ‘தமிழ்நாடு வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம்’ கடந்த 2009-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதன்படி, வன்னியர்களால் அல்லது அவர்களின் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட சொத்துகளையும் நிலைக்கொடைகளின் சொத்துகளையும் பாதுகாப்பதற்காக ‘தமிழ்நாடு வன்னிய குல சத்ரியர் பொது அறநிலை பொருப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள்’ என்ற சட்டம் இயற்றப்பட்டது.
இந்த சட்டம், கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் நடைமுறைக்கு வந்தது. வன்னியர் அறக்கட்டளை சொத்துகளை ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தும் நபர்களிடம் இருந்து அவற்றை கைப்பற்ற இச்சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். சொத்துகளை தவறான வழிகளுக்கு பயன்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். அதேபோல, ஒவ்வொரு அறக்கட்டளையிலும் வாரியத்தின் சர்வே அலுவலர் புலத்தணிக்கை செய்து, அதன் நிர்வாகிகளுக்கு உரிய அறிவிப்பு கொடுக்க வேண்டும். பின்னர், அந்த சொத்துகளின் ஆவணங்களை சேகரித்து அதன் விவரங்களை அரசிதழில் வெளியிட வேண்டும். அதன்படி, தற்போது 118 சொத்துகள் வாரியத்தின் மூலமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வாரியத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான ஜி.சந்தானம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் இருந்த வன்னியர் அறக்கட்டளைக்கு சொந்தமான பல்வேறு சொத்துகள் அடையாளம் காணப்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாரிடம் இருந்த பி.டி.லீ. செங்கல்வராயர் அறக்கட்டளைக்கு சொந்தமான சென்னை ராயப்பேட்டையில் உள்ள 12.6 கிரவுண்டு நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார்ரூ.87 கோடியாகும். அதுபோல, திருவொற்றியூரில் ரூ.50 கோடி மதிப்புள்ள வன்னியர் மகா சங்கத்துக்கான சொத்து ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தவறான விவரங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வன்னியர்களது அறக்கட்டளைகள் குறித்து தற்போது மாவட்டம்தோறும் ஆய்வு செய்ததில் 118 சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முதல்கட்டமாக பி.டி.லீ.செங்கல்வராய நாயக்கர், சேலம் எஸ்.கந்தசாமி கவுண்டர், திண்டிவனம் வன்னியர் கல்வி அறக்கட்டளை உள்ளிட்ட 63 அறக்கட்டளைகள் வாரியத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 14 அறக்கட்டளைகளின் சொத்துகள் புலம் வாரியாக தணிக்கை செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.
அதேபோல, பதிவு செய்யப்பட்ட பொது அறநிலைய பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள்கீழ் 23 பள்ளிகள், 7 கலை அறிவியல் கல்லூரிகள், 2 பொறியியல் கல்லூரிகள், ஒரு சட்டக் கல்லூரி, ஒரு பாலிடெக்னிக் கல்லூரி, 2 ஐஐடி என மொத்தம் 36 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. வேலூர் வட ஆற்காட்டு வன்னியர் சங்கத்தின் மூலமாக அரசுப் பணிகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
சிதம்பரம், கள்ளக்குறிச்சி, திருக்கழுக்குன்றம் ஆகிய இடங்களில் அறக்கட்டளை மூலம் சமூக நலக் கூடம், திருமண மண்டபங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.