Published : 22 Jan 2022 08:17 AM
Last Updated : 22 Jan 2022 08:17 AM

ஞாயிறு முழு ஊரடங்கை ரத்து செய்ய கோரிக்கை

சென்னை: ஊரங்கால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளின் நலன் கருதி, இரவு நேரஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று தமிழ்நாடு வியாபாரிகள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 2 ஆண்டுகளாக கரோனாதொற்று பட்டியலிட முடியாததாக்கத்தை அடித்தட்டு வணிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. கடந்த கால பாடங்களில் இருந்து அரசு நெறிமுறைப்படுத்த வேண்டியது விழிப்புணர்வு, மக்களின் சுயக்கட்டுப்பாடு மற்றும் மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மட்டுமே.

தடுப்பூசி போட்டுக் கொள்வது, முகக்கவசம் அணிதல், இரவு நேரஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவை எல்லாம் மறு பரிசீலனைக்கு உட்பட்டவை. இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அனைத்தும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளன. மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தடுப்பூசி கட்டாயமல்ல என்று தெரிவித்துள்ளது.

இக்கருத்துகளை கவனத்தில் கொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய பரிசீலனை செய்து, இதர மாநிலங்களுக்கு முன்னோடியாக சுய கட்டுப்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுத்து, பொருளாதார முடக்கத்தை மேலும் நீட்டிக்காமல், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு போன்றவற்றை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அரசு அறிவித்த அபராத உயர்வுத் தொகையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x