Published : 22 Jan 2022 08:31 AM
Last Updated : 22 Jan 2022 08:31 AM

கொளத்தூரில் குடிநீர், கழிவுநீர் திட்ட பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கொளத்தூர் தொகுதியில் அசோக் அவென்யூ, ஜெகநாதன் சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். படம்: ம.பிரபு

சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் குடிநீர் மற்றும் கழிவுநீர் திட்டப் பணிகளை, அத்தொகுதி எம்எல்ஏவும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.

கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கவுதமபுரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இக்குடியிருப்புகளுக்கு சென்னை குடிநீர் வாரியத்தின் வியாசர்பாடி நீர்நிலை பகிர்மான நிலையத்திலிருந்து ஜவஹர் சாலை வரை 2.8 கிமீ தூரத்துக்கு ரூ.99 லட்சத்தில் பிரதான குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட உள்ளன.

இத்திட்டத்தின் தொடக்க விழா அக்குடியிருப்பு வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, ஜிகேஎம் காலனி, ஜம்புலிங்கம் பிரதான சாலையில் ரூ.40 லட்சத்து 30 ஆயிரம் செலவில் கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைக்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். பின்னர் ரங்கதாஸ் காலனி மற்றும் நேதாஜி காலனி பிரதான சாலையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், அசோக் அவென்யூ, ரங்கதாஸ் காலனி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்கள் பணிகள் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து, அஞ்சுகம் நகர் 12-வது தெருவில் தார் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைத்து பணிகளையும், விரைவாகவும், தரமாகவும், குறித்த நேரத்திலும் முடித்திட அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

கொளத்தூர் தொகுதிக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஒருசில இடங்களில் காரிலிருந்து இறங்கி, பொதுக்களிடம் கலந்துரையாடி நலம் விசாரித்தார். பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கலாநிதி வீராசாமி எம்பி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் சி.விஜயராஜ் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

குடியிருப்புகளுக்கு சென்னை குடிநீர் வாரியத்தின் வியாசர்பாடி நீர்நிலை பகிர்மான நிலையத்திலிருந்து ஜவஹர் சாலை வரை 2.8 கிமீ தூரத்துக்கு ரூ.99 லட்சத்தில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x