மின்சார ரயில்களில் கட்டுப்பாடு எதிரொலி: சென்னை மாநகர பேருந்துகளில் பயணிகள் கூட்டம் 20% அதிகரிப்பு

மின்சார ரயில்களில் கட்டுப்பாடு எதிரொலி: சென்னை மாநகர பேருந்துகளில் பயணிகள் கூட்டம் 20% அதிகரிப்பு
Updated on
1 min read

சென்னை: மின்சார ரயில்களில் பயணிக்க கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளதால், மாநகர பேருந்துகளில் 20 சதவீதம் கூட்டம் அதிகரித்துள்ளதாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு காரணமாக கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் மின்சார ரயில்களில் பயணிக்க கரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்தி இருக்க வேண்டும். சீசன் டிக்கெட்டில் தடுப்பூசி எண் இணைக்கப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுபாடுகளை விதிக்கப்பட்டுள்ளன.

2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் வருபவர்கள் மின்சார ரயில்களில் பயணிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் திருப்பி அனுப்பி வைக்கின்றனர். இதனால், மின்சார ரயில்களில் கூட்டம் குறைந்துள்ளது. மற்றொருபுறம் மாநகர பேருந்துகளில் பயணம் செய்வது அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மின்சார ரயில்களில் பயணிக்க பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், அனைத்து மக்களும் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், மாநகர பேருந்துகளில் மக்கள் பயணம் செய்து வருவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஜிஎஸ்டி சாலை வழியாக தாம்பரம், வண்டலூர், கூடுவாஞ்சேரி, வேளச்சேரி, திருவாற்றியூர், ஆவடி, திருவள்ளூர் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் கூட்டம் அதிகரித்துள்ளது.

மாநகர பேருந்துகளில் தினசரி சராசரி பயணிகளின் எண்ணிக்கை 17.83 லட்சமாக இருந்து வருகிறது. தற்போது இதில், 20 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது’’என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in