

சென்னை: சட்டக்கல்லூரி மாணவரை காவல் நிலையத்தில் வைத்து தாக்கிய விவகாரத்தில் எம்.கே.பி. நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நசீமா உட்பட 9 போலீஸார் மீது 3 பிரிவுகளின் கீழ் கொடுங்கையூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வியாசர்பாடி புதுநகர், 8-வது தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரகீம். சட்டக்கல்லூரி மாணவரான இவரை கடந்த 14-ம் தேதி நள்ளிரவு முகக்கவசம் சரியாக அணியவில்லை என்று அபராதம் விதித்துடன் அவர் ஓட்டி வந்த சைக்கிளையும் கொடுங்கையூர் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இந்த விகாரத்தில் மாணவருக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நடந்ததாக தெரிகிறது. இதன்பேரில் அப்துல் ரகீமை கைது செய்த போலீஸார் அவரை காவல் நிலையத்தில் வைத்து சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், மாணவர் படுகாயம் அடைந்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பான காட்சிகள் பதிவாகாமல் இருக்க காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீஸார் திருப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையறிந்த மாணவரின் பெற்றோர், நண்பர் தரப்பினர் காவல் நிலையம் சென்று நியாயம் கேட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து உரிய விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி நடத்தப்பட்ட விசாரணைஅடிப்படையில், கொடுங்கையூர் காவல் நிலைய தலைமைக் காவலர் பூமிநாதன், முதல்நிலை காவலர் உத்திரகுமரன் ஆகியோர் காவல் கட்டுப்பாட்டறைக்கு மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். பின்னர் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் 2 தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டார்.
இந்நிலையில், மாணவர் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக எம்.கே.பி. நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நசீமா, கொடுங்கையூர் காவல் நிலைய காவலர்கள் உத்திரகுமார், பூமிநாதன், ஹேமநாதன், சத்தியராஜ், ராமலிங்கம், அந்தோணி உட்பட 9 போலீஸார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
காயப்படுத்துதல், மரணத்தை விளைவிக்க கூடிய ஆயுதத்தால் தாக்குதல், ஆபாசமாக பேசுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இதனிடையே, மாணவர் மீது காவல் நிலையத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை வடக்கு உட்கோட்ட நடுவர் மற்றும் வருவாய் கோட்ட ஆட்சியருக்கு சென்னை கலெக்டர் விஜயா ராணி உத்தரவிட்டுள்ளார்.