Published : 22 Jan 2022 11:43 AM
Last Updated : 22 Jan 2022 11:43 AM

செங்கை மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 70 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் இலக்கு: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தகவல்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தை அடுத்த இடையாத்தூரில் சம்பா பருவத்துக்கான நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்த குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், 70 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தை அடுத்த இடையாத்தூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பிலான நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் திறப்பு விழா, மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று திறந்துவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்ததாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் சம்பா பருவத்துக்காக 59 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக இடையாத்தூர், படாளம், மதுரா புதூர், சூனாம்பேடு, காரியந்தாங்கல் ஆகிய பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த சொர்ணவாரி பருவத்தில் 33 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, 40,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது, சம்பா பருவத்தில் 59 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து, 70 ஆயிரம்மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் இம்மாவட்டத்தில் சொர்ணவாரி பருவத்தில் மொத்தம் 7 இடங்களில் மட்டுமே நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து, 11 ஆயிரம் மெட்ரிக் டன் மற்றும் சம்பா பருவத்தில் 36 ஆயிரம் மெட்ரிக் டன் அளவில் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

ஆனால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விவசாயிகளின் கோரிக்கையின் பேரில் தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகை, அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தியாகராஜன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக துணை மண்டல மேலாளர் அருண்பிரசாத், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x