Published : 22 Jan 2022 08:49 AM
Last Updated : 22 Jan 2022 08:49 AM

எனது வீட்டிலிருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்படவில்லை: முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

தருமபுரி: தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்எல்ஏ, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கெரகோட அள்ளியில் உள்ள அவரது வீடு, அவரது உறவினர்கள் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்கள் என 58 இடங்களில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

சோதனை முடிவில் ரூ.2.88கோடி பணம் மற்றும் 6.637 கிலோதங்கம், 13.85 கிலோ வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, கெரகோடஅள்ளியிலுள்ள கே.பி.அன்பழகன் வீட்டில் நேற்று முன்தினம் இரவு 10 மணி வரை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அதன் பின்னர், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியது:

எனது வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் சோதனையில் பணம், நகை எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதை அவர்கள் எழுத்துப் பூர்வமாக தெரிவித்துச் சென்றுள்ளனர்.

தற்போதைய திமுக ஆட்சியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் இடம்பெற்றிருந்தன. இது தொடர்பாக ரூ.500 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.

இதைப்பற்றி, முன்னாள் முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து, தரமற்ற பொருட்கள் வழங்கியதால் மக்கள் மத்தியில் அரசின் மீது ஏற்பட்ட அதிருப்தியை திசை திருப்பும் நோக்கத்துடன் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் மூலம் சோதனை நடத்தியுள்ளனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x