வடபழனி முருகன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்: ஆன்லைனில் ஒளிபரப்ப ஏற்பாடு

வடபழனி முருகன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்: ஆன்லைனில் ஒளிபரப்ப ஏற்பாடு
Updated on
1 min read

சென்னை: வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. கும்பாபிஷேக நிகழ்வுகளை ஆன்லைனில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை வடபழனி முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சென்னையில் உள்ளவர்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருவது வழக்கம். இந்த கோயிலில் கடந்த 2007-ம்ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பிறகு தற்போது கோயில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

இதற்கான யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் தொடங்கின. கோயிலுக்குள் 108 குண்டங்களுடன் பிரம்மாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.

யாகசாலையில் வைத்து பூஜிப்பதற்காக கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளில் இருந்தும், ராமேசுவரம் தீர்த்தக்கிணறு, அறுபடை முருகன் கோயில்கள் என 15 இடங்களில் இருந்தும் புண்ணிய தீர்த்தம் கொண்டு வரப்பட்டது.

நேற்று காலை 9 மணிக்கு இரண்டாம் கால பூஜை தொடங்கி பகல் 12 மணிக்கு மகா பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்றது.

பின்னர், மாலை 5.30 மணிக்கு மூன்றாம் கால பூஜைகள் நடந்தன. இன்றும் யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடக்க உள்ளன. இதைத் தொடர்ந்து நாளை காலை கும்பாபிஷேகம் நடக்கிறது.

கரோனா வைரஸ் பரவல் மற்றும் முழு ஊரடங்கு காரணமாக கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொலைக்காட்சி, யூ-டியூப் சேனல் போன்றவை மூலம் கும்பாபிஷேக விழாவை நேரலையாக ஒளிபரப்ப தேவையான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in