Published : 22 Jan 2022 10:44 AM
Last Updated : 22 Jan 2022 10:44 AM

ரூ.160 கோடியில் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனை: மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அருகே அமைகிறது

மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனை அருகே சூப்பர் ஸ்பெஷா லிட்டி மருத்துவர்களை கொண்ட குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ மனை ரூ.160 கோடியில் அமைக்கப் பட உள்ளது.

ராஜாஜி மருத்துவமனையில் தற்போது மற்ற சிகிச்சை பிரிவுகளைப்போல் குழந்தைகள் சிகிச்சைக்கும் தனி துறை மட்டுமே உள்ளது. அதேநேரம், குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் என பெயரிடப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 250 குழந்தைகள் சிகிச்சை பெற படுக்கை வசதி, தரமான உபகரணங்கள் உள்ளன. ஆனால், பிறந்த குழந்தைகளுக்கான பிரிவை தவிர, மற்ற பிரிவுகளில் குழந்தைகளுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்கள் இல்லை. ஆய்வகங்கள் இல்லை. மிகவும் பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

எனவே, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனையில் வழங்கப்படும் சிறப்பு சிகிச்சை போல மதுரையிலும் கிடைக்கச் செய்யும் வகையில் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது. இதையேற்று குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையை அமைப் பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் அனுப்பியது. அரசின் நிதி ஒதுக்கீடு கிடைத்தபிறகு தற் போது உள்ள சூப்பர் ஸ்பெ ஷாலிட்டி மருத்துவமனை அருகே குழந்தைகள் நல சிறப்பு மருத்து வமனை அமையலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது: எழும்பூரில் இருப் பதைப் போன்று குழந்தைகள் நல மருத்துவமனையை அமைக்கும் நோக்கத்தில்தான், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுக்கு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் என்று பெயரிடப்பட்டது. ஆனால், சென்னையை போல் இங்கு பிரத்தியேக ஆராய்ச்சி எதுவும் செய்யப்படவில்லை. சிறிய அளவிலான ஆராய்ச்சி மட்டுமே நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது சென்னை எழும்பூரில் உள்ளதைப் போன்று சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்களை கொண்ட குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சிக் கூடம் அமைக்கப்பட இருக்கிறது.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தை களுக்கான தோல், சிறுநீரகம், நரம்பியல், நுரையீரல், கல்லீரல், இரைப்பை, இதயம், ரத்தம் சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர். அறுவை சிகிச்சை தனிப்பிரிவும் உள்ளது. ​பிறந்த குழந்தைகள் முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு கல்லீரல், சிறுநீரகம், புற்றுநோய், ரத்தநாள நோய்கள் உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் அங்கே அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. அதைப் போன்ற கட்டமைப்புகளுடன் கூடிய குழந்தைகள் நல மருத்துவமனை, மதுரையில் அமைய உள்ளது.

மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு ரூ.110 கோடி, மருத்துவ உபகரணங்களை வாங்க ரூ.50 கோடி என மொத்தம் ரூ.160 கோடி மதிப்பீட்டில் குழந்தைகள் மருத்துவமனையை அமைப்பதற்கான திட்டம் தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x