Published : 22 Jan 2022 01:15 PM
Last Updated : 22 Jan 2022 01:15 PM
கொடைக்கானலில் கரோனா கட்டுப்பாடுகளால் மூடப்பட்டிருந்த பேரிஜம் ஏரிக்குச் செல்ல 2 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் தோட்டக் கலைத் துறையின் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஸ் கார்டன், நகராட்சியின் கோக்கர்ஸ்வாக், சுற்றுலாத் துறையின் படகு சவாரி, வனத் துறையின் மோயர்பாய்ண்ட், குணா குகை, தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பைன்பாரஸ்ட், மன்னவூர் சுற்றுச்சூழல் பூங்கா, பேரிஜம் ஏரி ஆகிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன.
இவற்றில் பேரிஜம் ஏரி பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் உள்ளது. இதனால் வனத் துறையினரிடம் அனுமதி பெற்ற பிறகே சுற்றுலா பயணிகள் ஏரிக்கு செல்ல முடியும். பேரிஜம் ஏரிக்கு செல்லும் வழியில் தொப்பிதூக்கி பாறை, மதிகெட்டான்சோலை, வியூ பாய்ண்ட், அமைதி பள்ளத்தாக்கு மற்றும் பசுமை போர்த்திய மலைத் தொடர்கள் என இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம். இதனால் சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரி பகுதிக்குச் செல்ல அதிக ஆர்வம் காட்டுவர்.
இந்நிலையில் பேரிஜம் ஏரிப் பகுதிக்கு செல்லும் சாலைகளைப் புதுப்பிக்க 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூடப்பட்டது. தொடர்ந்து கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
ஓராண்டுக்குப் பிறகு கரோனா பாதிப்பு குறைந்ததால் பிற சுற்றுலாத்தலங்கள் திறக்கப் பட்டன. பேரிஜம் ஏரிக்குச் செல்ல தடை நீடித்தது. இரண்டாவது அலையிலும் பேரிஜம் ஏரி மூடப் பட்டிருந்தது.
ஏரிப்பகுதிக்கு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா டாக்சி ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு பேரிஜம் ஏரி பகுதிக்குச் செல்ல, நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு வனத் துறையினர் அனுமதி அளித்துள்ளனர். வனத் துறை அலுவலகத்தில் ரூ.200 கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும். நாள் ஒன்றுக்கு 50 அனுமதிச் சீட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என வனத்துறை யினர் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT