Published : 16 Apr 2016 10:57 AM
Last Updated : 16 Apr 2016 10:57 AM

தலித் வாக்குகளை குறி வைக்கும் ஓபிஎஸ்: போடிநாயக்கனூரில் பிரச்சாரம் தீவிரம்

போடி தொகுதியில் வெற்றி பெற தலித் மக்களின் வாக்குகள் முக்கியம் என்பதால், அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தேனி மாவட்டம், போடி சட்டப் பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். திமுக சார்பில் கடந்த தேர்தலில் தோல்வியடைந்த லட்சுமணன் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். இத்தொகுதியில் முக்குலத்தோரில் மறவர், செட்டியார், நாயுடு, தாழ்த்தப்பட்டோர் வாக்குகள் கணிசமாக உள்ளன. வெற்றியை நிர்ணயிப்பதில் தாழ்த்தப்பட்டோர் வாக்குகளையே அதிகம் நம்பும் நிலை உள்ளது.

கடந்த தேர்தல்களில் இவர்களின் வாக்குகளை பன்னீர்செல்வம் எளிதாகப் பெற்றார். ஆனால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் 5 முனைப்போட்டி உருவாகியுள்ளது. புதிய தமிழகம் திமுக கூட்டணியில் உள்ளது. விடுதலை சிறுத்தைகள் அமைப்பு மக்கள் நலக்கூட்டணியில் உள்ளது. ஜான் பாண்டியனும் சீட் ஒதுக்கப்படாததால் அதிமுகவில் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் தாழ்த்தப்பட்டோர் சார்ந்த முக்கிய இயக்கங்கள் ஏதும் அதிமுக கூட்டணியில் இடம் பெறவில்லை. எனவே இவர்களின் வாக்குகளை பெறுவதில் சிக்கல் ஏற்படுமோ என்ற சந்தேகம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.

இதை தவிர்க்க போடி தொகுதி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலித் மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்கள், குடியிருப்பு பகுதிகளில் முதற்கட்டமாக பிரச்சாரத்தை முடிக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். முன்னதாகவே சென்று இந்த மக்களிடம் வாக்குகளை கேட்டு உறுதி வாங்கிவிட்டால் தனது வெற்றிக்கு உதவும் என்பது அவர் கணிப்பு. தாமதித்தால், தலித் இயக்கங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்திவிடும். பின்னர் ஆதரவு கேட்டால், எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்பதால் இந்த முன்னேற்பாடு என்கின்றனர் கட்சியினர்.

மேலும் ஓ.பன்னீர்செல்வம் தாழ்த்தப்பட்டோரிடம் மிக நெருங்கிச் சென்று வாக்குகளை கேட்கிறார். தனது பாதுகாப்பு அதிகாரிகள், கட்சியினர் உட்பட அனைவரும் 10 அடிக்குப் பின்னால் வருமாறு பார்த்துக் கொள்கிறார்.

இது குறித்து கட்சியினர் கூறும்போது, ‘தாழ்த்தப்பட்ட மக்கள் என்ன சொன்னாலும் அதை பன்னீர்செல்வம் உன்னிப்பாக கேட்கிறார். ஒருசில இடங்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பல கிராமங்களில் பன்னீர்செல்வம் மீதான பழைய, பாசமான பார்வை மாறவில்லை. தங்களுக்கு எதிரான சமுதாயத்தை சார்ந்த பிரமுகராக பன்னீர்செல்வத்தை அவர்கள் பார்க்கவில்லை. பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, 18-ம் கால்வாயை நீட்டித்து பாசன நீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டது, பெரியாறில் கோழியனூரில் இணைப்பு பாலம் என பல திட்டங்களை இவரால் மட்டுமே நிறைவேற்ற முடிந்ததை மக்கள் மறக்கவில்லை. மேலும் அரசு நலத்திட்ட உதவிகளை விடுபடாமல் வழங்கியுள்ளார். அவர்களின் இல்ல விழாக்களில் தவறாது பங்கேற்று வந்துள்ளார்.

போடி நகர்ப்பகுதி உட்பட சில இடங்களில் திமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதால், இதை சரிக்கட்டி வெற்றி பெற தலித் மக்கள் ஆதரவு முக்கியம் என்பதை உணர்ந்து திட்டமிட்டு தேர்தல் பணியாற்றுகிறார்’ என்றனர். பன்னீர்செல்வத்துக்கு சரியான போட்டியை ஏற்படுத்த திமுக உள்ளிட்ட கட்சிகளும் தயாராகி வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x