

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக 4 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கரோனா நோயாளிகள் விரைவில் குணமடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுகளை வழங்க மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட் டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா 2 அலைகளும் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தவில்லை. கரோனா முதல் மற்றும் 2-ம் அலையின் போது அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி, கரோனா சிறப்பு சித்தா சிகிச்சை மையம், யுனானி சிகிச்சை மையங்களில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு பாரம்பரிய முறைப்படி மருத்துவம் மற்றும் உணவு வகைகள் வழங்கப் பட்டதால் கரோனா பாதிப்புக்கு உள்ளான நோயாளிகள் 5 நாட் களிலேயே குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில், தற்போது கரோனா 3-வது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருவதால் நோய் தடுப்புப்பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி யுள்ளது.
அதன்படி, திருப்பத்தூர் மாவட் டத்தில் கடந்த 2 அலைகளில் பின்பற்றிய நடைமுறைகளை இந்த முறையும் கடைப்பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் அரசு மருத்துவமனைகளை தவிர 6 ஒன்றியங்களிலும் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இது மட்டுமின்றி, நாட்றாம்பள்ளி அடுத்த அக்ரகாரம் பகுதியிலும், வாணியம்பாடி, திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் பகுதிகளில் கரோனா சித்தா மையம் மீண்டும் தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு மையத்திலும் 100 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. பாரம்பரிய முறைப்படி மருத்துவம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவு வகைகள், மூலிகை குடிநீர் மற்றும் சூப் வகைகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘திருப்பத் தூர் மாவட்டத்தில் கரோனா தொற் றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்காக, 4 அரசு மருத்துவமனைகளில் மட்டும் 1,303 படுக்கைகள் ஒதுக் கப்பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் ‘கோவிட் கேர் சென்டர்’ (கரோனா சிறப்பு சிகிச்சை மையம்) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையங்களில் 2,575 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வகைகள் நோயாளிகளுக்கு வழங்க மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட் டுள்ளார்.
அதன்படி, கரோனா நோயாளி களுக்கு திங்கள்கிழமைகளில் காலை இட்லி, புதினா சட்னியும், மதியம் அரிசி சாதம், முருங்கை கீரை குழம்பு, கேரட் பொறியல், மிளகு ரசமும், இரவு கோதுமை உப்புமா, தக்காளி இஞ்சி சட்னி போதுமான அளவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்கிழமைகளில் காலை மிளகு வெண் பொங்கல், கொத்தமல்லி சட்னி, மதியம் புதினா சாதம், தக்காளி சாதம், அவரைக்காய் பொறியலும், இரவில் இடியாப்பம், காய்கறி குருமாவும், புதன்கிழமைகளில் காலை காய்கறி ரவா கிச்சடி, வேர்க்கடலை சட்னியும், மதியம் அரிசி சாதம், முருங்கைக்காய் காரக்குழம்பு, பீட்ரூட் பொறியல், தக்காளி ரசம், இரவில் இட்லி, தேங்காய் கடலை சட்னியும், வியாழக்கிழமைகளில் காலை தக்காளி பொங்கல், கொத்தமல்லி சட்னியும் மதியம் வெஜிடபிள் பிரியாணி, எண்ணெய் கத்திரிக்காயும், இரவில் சாமை அரிசி உப்புமா, புதினா சட்னியும், வெள்ளிக்கிழமை காலை இட்லி, புதினா சட்னியும், மதியம் அரிசி சாதம், முருங்கை கீரை குழம்பு, பீன்ஸ் பொறியல், தூதுவளை ரசம், இரவில் சப்பாத்தி, பருப்பு கடைசலும், சனிக்கிழமை காலைதினைப்பொங்கல், தேங்காய் கடலை சட்னியும், மதியம் நெல்லிக்காய் சாதம், கொத்தமல்லி சாதம், வாழைப்பூ பொறியல், இரவில் இட்லி, சின்ன வெங்காய சாம்பார், ஞாயிற்றுக்கிழமை காலையில் கோதுமை ரவா பொங்கல், கொத்தமல்லி சட்னியும், மதியம் வெஜிடபிள் பிரியாணி, எண்ணெய் கத்திரிக்காய், இரவில் இடியாப்பம் தக்காளி பூண்டு சட்னி வழங்க பேரிடர் மேலாண்மை துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்து ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.
இது தவிர கரோனா சிகிச்சை மையங்களில் தங்கியுள்ள நோயாளிகளுக்கு தினசரி காலை, மாலை நேரங்களில் தேநீர்,கபசுர குடிநீர், மூலிகை குடிநீர், யோகாசனம், மூச்சுப்பயிற்சி, புத்தகம் படிப்பது, மன அழுத்தத்தை குறைக்க புத்தகம் மற்றும் விளையாட்டு, கலந்துரையாடல், தனித்திறன் வெளிப்படுத்தல் உள்ளிட்ட பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு முகாம்களில் சிகிச்சை எடுக்கும் கரோனா நோயாளிகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ.250 வரை செலவழிக்க நிதி ஒதுக் கப்பட்டுள்ளதாக’’ அதிகாரிகள் தெரிவித்தனர்.