

கரூர்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பொறியாளருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.60,000 அபராதம் விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் பொருந்தலூர் அருகேயுள்ள தெலுங்கப்பட்டியைச் சேர்ந் தவர் ராசு என்கிற நல்லுசாமி. இவர் மகன் பாரதியார் (26). இவர் தனியார் நிறுவன பொறியாளர்.
கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 8 மற்றும் செப். 1 ஆகிய தேதிகளில் அதே ஊரைச் சேர்ந்த 14 வயது சிறுமியை மிரட்டி அப்பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்திற்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுதொடர்பாக குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையில் கடந்த 2019ம் ஆண்டு செப். 19ம் தேதி சிறுமி அளித்த புகாரின்பேரில் போலீஸார் பாரதியார் மீது கடத்தல், பாலியல் கு ற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் காணொலி மூலம் இன்று (ஜன. 21ம் தேதி) தீர்ப்பு வழங்கப்பட்டது. குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்து பாரதியார் பங்கேற்றார்.
காணொலி மூலம் நீதிபதி ஏ.நசீமாபானு அளித்த தீர்ப்பில், சிறுமியை கடத்திய குற்றத்திற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல், ரூ.10,000 அபராதம், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஒராண்டு தண்டனை.
போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.50,000 அபராதமும், அதனை செலுத்த தவறினால் மேலும் 1 ஆண்டு சிறைத்தண்டனையும் இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்கவும், சிறுமிக்கு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும், அபராதத் தொகை ரூ.60,000 சிறுமியின் புனர்வாழ்வுக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு அழைத்த வரப்பட்ட பாரதியார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கரூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.