Published : 21 Jan 2022 04:53 PM
Last Updated : 21 Jan 2022 04:53 PM

வானலைகளில் தவழ்ந்து வருகிறது பொங்கும் பூம்புனல்: மீண்டும் தொடங்கியது இலங்கை சர்வதேச தமிழ் வானொலி

ராமேஸ்வரம்: இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் தமிழ் சர்வதேச வானொலி மீண்டும் தொடங்கப்பட்டதன் மூலம் பொங்கும் பூம்புனல் போன்ற சுவாரஸ்ய நிகழ்ச்சிகள் வானலைகளில் மீண்டும் தவழ்ந்து வரத் தொடங்கியுள்ளன. இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் கொழும்பு சர்வதேச வானொலி ஒலிபரப்பு சேவை 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழக நேயர்களுக்காக வியாழக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

ஆசியாவின் முதல் வானொலி: டிசம்பர் 16, 1925 ஆம் ஆண்டு 'சிலோன் ரேடியோ' என்ற பெயரில் நிறுவப்பட்ட இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் தான் ஆசியாவின் முதல் வானொலி நிலையம், உலகின் இரண்டாவது வானொலி நிலையம் என்ற பெருமையோடு நிறுவப்பட்டது. (பிபிசி வானொலி 1922ல் லண்டனில் முதன்முதலாக நிறுவப்பட்டது) இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் தனது வர்த்தக சேவை பிரிவு 30.09.1950ல் தொடங்கிய உடனேயே இந்தியத் துணைக் கண்ட அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இமயமலையில் உச்சியில் கால் பதித்த எட்மண்ட் ஹிலாரியும், டென்சிங் நார்கேயும் கூட இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் வர்த்தக ஒலிபரப்பைத்தான் முதலில் செவிமடுத்தார்கள்.

அகில இந்திய வானொலி நிலையம் திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது என்று அந்தக் காலத்தில் இந்திய தகவல் ஒலிபரப்புத் துறை தடை விதித்திருந்ததால் தமிழ் திரைப்படவுலகம் தன் வியாபாரத்தை விரிவு செய்ய விளம்பரம் செய்யும் ஊடகமாக இலங்கை வானொலியைதான் அந்தக் காலக்கட்டத்தில் நம்பியிருந்தது.

கொழும்புவில் அமைந்துள்ள இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம்

காலை முதல் இரவு வரை: 1989ம் ஆண்டில் ஜூலை மாதம் நடுப்பகுதியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்திலிருந்து கொழும்பு சர்வதேச ஒலிப்பரப்பு தொடங்கப்பட்டது. தினந்தோறும் மாலை 4 மணிமுதல் 7 மணிவரை தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிப்பரப்பாயின. தொடக்கத்தில் தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், சிங்களம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் அந்தந்த மொழி அறிவிப்பாளர்களைக் கொண்டு நிகழ்ச்சிகள் ஒலிப்பரப்பாகின. 1990ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் காலை ஒலிப்பரப்பு தொடங்கப்பட்டது. காலை 7 மணிமுதல் 8:30 மணிவரையிலும் முழுக்க முழுக்க தமிழ் நிகழ்ச்சிகள் மட்டுமே ஒலிபரப்பு செய்தது. தொடர்ந்து காலை 10 மணி வரை ஒலிப்பரப்பு நேரம் நீட்டிக்கப்பட்டது. விளம்பரதாரர் நிகழ்ச்சிகள் அதிகரிப்பட்டதும் காலை மட்டுமின்றி மதியம் 2:45 முதல் மாலை 6 மணி வரையிலும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டன.

உங்கள் கே.எஸ்.ராஜா: அக்காலத்தில் காலை எழுந்ததும் இலங்கை வானொலியில் மக்கள் விரும்பிக்கேட்ட இனிய தமிழ்ப் படப்பாடல்களின் ஒலிபரப்பாக வலம்வந்தது 'பொங்கும் பூம்புனல்'. அதுமட்டுமல்ல, நேயர் விருப்பம், நீங்கள் கேட்டவை, அன்றும் இன்றும், புது வெள்ளம், மலர்ந்தும் மலராதவை, இசைத் தேர்தல், பாட்டுக்கு பாட்டு, இசையும் கதையும், இன்றைய நேயர், விவசாய நேயர் விருப்பம், இரவின் மடியில் என தூய தமிழில் புதுமையான நிகழ்ச்சிகளை வழங்கி தமிழகத்தில் தனக்கென்று நேயர்கள் வட்டத்தை இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் உருவாக்கிக் கொண்டதுடன் அதில் பணியாற்றிய ஒலிபரப்பாளர்களான எஸ்.பி. மயில்வாகனன், கே.எஸ். ராஜா, பி.ஹெச். அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம் ஆகியோருக்கு தமிழகத்தின் முன்னணி சினிமா நட்சத்திரங்களுக்கு இருந்த ரசிகர்களின் எண்ணிக்கையை விட நேயர்களின் எண்ணிக்கையில் அதிகளவில் இருந்தனர்.

மீண்டும் தொடங்குவதற்கான அறிவிப்பு: இன்றளவும் உலகில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலப் பாடல்களின் இசைத் தட்டுக்களைக் கொண்டே ஒரே வானொலி நிலையம் இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் மட்டுமே. இலங்கை உள்நாட்டுப் போரினால் தமிழகத்தில் ஏற்பட்ட கடும் எதிர்ப்புணர்வுகளுக்கிடையே கடந்த 31.05.2008 அன்று இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் தனது தமிழக நேயர்களுக்கான கொழும்பு சர்வதேச ஒலிபரப்பை (மத்திய அலை ஒலிபரப்பை (873 கிலோ.ஹெர்ட்ஸ்) சேவையை நிறுத்திக் கொண்டது. கொழும்பு சர்வதேச ஒலிபரப்பை மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத் தலைவர் ஹட்சன் சமரசிங்க கடந்த தீபாவளி அன்று இந்த வானொலி சேவையை மீண்டும் தொடங்குவதற்கான தீர்மானத்தை கடந்த தீபாவளி அன்று நிறைவேற்றினார்.

முன்புபோல நேரலையில் பங்கேற்கலாம்: இந்நிலையில் 20.01.2022 வியாழக்கிழமை 13 ½ ஆண்டு இடைவெளிக்கு பிறகு இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் தமிழக நேயர்களுக்காக கொழும்பு சர்வதேச வானொலி தனது ஒலிபரப்பை மீண்டும் தொடங்கியது. நிகழ்ச்சியை முதற்கட்டமாக தினந்தோறும் காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் மத்திய அலைவரிசையில் 873 கி.ஹெர்ட்ஸில் கேட்கலாம். தமிழக நேயர்களின் வரவேற்பு மற்றும் விளம்பரங்களைப் பொறுத்து ஒரு மணி சேவையை பல மணி நேர சேவையாக மாற்றப்படும் என்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் தமிழ்ச் சேவைகளின் பொறுப்பாளர் வீரசிங்கம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். +94772102102 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மற்றும் கைபேசி வாயிலாக தமிழக நேயர்கள் நிகழ்ச்சியின் போது நேரலையில் கலந்து கொள்ளலாம்.

இந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் தமிழக நேயர்களுக்காக ஒலிபரப்பு தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் உள்ள தமிழ் நேயர்களையும் சென்றடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அன்றைய நேயர்களை மகிழ்வித்த பொங்கும் பூம்புனல், இரவின் மடியில் போன்ற வானொலிப் பாடல்களுக்கான நிகழ்ச்சிகள் வானலைகளில் தவழ்ந்து வந்து இனி இன்றைய நேயர்களையும் மகிழ்விக்கும் என்று நாம் நம்பலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x