Last Updated : 21 Jan, 2022 04:01 PM

 

Published : 21 Jan 2022 04:01 PM
Last Updated : 21 Jan 2022 04:01 PM

திருச்சி: தெரு நாய்கள், காக்கைகளை விஷம் வைத்து கொன்றவர்கள் மீது வழக்குப் பதிய வலியுறுத்தல்

திருச்சி : திருச்சியில் கோழி இறைச்சியில் விஷம் வைத்து தெரு நாய்கள் மற்றும் காக்கைகள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருச்சி மாநகராட்சி 39-வது வார்டுக்குட்பட்டது கிருஷ்ணாபுரம் காலனி. கோரையாற்றின் கரையில், திருச்சி - மதுரை பழைய நெடுஞ்சாலையில் உள்ள எடமலைப்பட்டிப்புதூர் காவல் நிலைய சோதனைச் சாவடி அருகேயுள்ள இந்தப் பகுதியில் 25-க்கும் அதிகமான தெருநாய்கள் இருந்தன. இந்த நிலையில், நேற்று இரவு 8 மணிக்கு மேல் 14 தெரு நாய்கள் திடீரென அப்படியே சரிந்து விழுந்தன. இதைக் கண்ட குடியிருப்பு வாசிகள் அருகில் சென்று பார்த்தபோது, ரத்தம் கக்கி, உயிரிழந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, குடியிருப்புவாசிகள் தெருக்களில் தேடி பார்த்தபோது, கோழி இறைச்சி மற்றும் கோழிக் கழிவுகளில் விவசாயத்தில் குருணை மருந்தை கலந்து தெருக்களில் வீசியிருப்பதும், அவற்றை உண்டதாலேயே தெரு நாய்கள் ரத்தம் கக்கி உயிரிழந்திருப்பதும் தெரிய வந்தது. இது குறித்து சோதனைச் சாவடியில் இருந்த போலீஸாருக்கு குடியிருப்புவாசிகள் தகவல் தெரிவித்துவிட்டு, உயிரிழந்த 14 நாய்களையும் கோரையாற்றின் கரையில் புதைத்துள்ளனர்.

இதுதொடர்பாக கிருஷ்ணாபுரம் காலனி குடியிருப்புவாசிகள் கூறியது: "தெரு நாய்களைக் கொல்லும் நோக்கில் யாரோ திட்டமிட்டு, கோழி இறைச்சியில் குருணை மருந்தைக் கலந்து வீசியுள்ளனர்.
விஷம் கலந்த அந்த இறைச்சியை சாப்பிட்ட 13 தெரு நாய்கள் மட்டுமின்றி, வெளியே அவிழ்த்துவிடப்பட்டிருந்த ஒரு வளர்ப்பு நாயும் உயிரிழந்துவிட்டது. ரத்தம் கக்கி மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட மற்றொரு வளர்ப்பு நாயை, பாலக்கரை கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று காப்பாற்றியுள்ளனர். இன்று காலை 8 காகங்களும் ஆங்காங்கே இறந்து கிடந்தன. இதையடுத்து, விஷம் கலந்த கோழி இறைச்சியை காகங்களும் உண்டிருக்கலாம் என்று தெரிய வந்தது. இதையடுத்து, அவற்றையும் கோரையாற்றின் கரையில் புதைத்துவிட்டு, தெருக்களில் வீசப்பட்டிருந்த கோழி இறைச்சிகளை அப்புறப்படுத்தினோம்" என தெரிவித்தார்.

திருச்சி மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட மரியம் நகரில் கடந்த வாரம் 15-க்கும் அதிகமான நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட நிலையில், நேற்று கிருஷ்ணாபுரம் காலனியில் 14 நாய்கள் கொல்லப்பட்டிருப்பது வளர்ப்பு விலங்குகள் நல ஆர்வலர்களை வேதனை அடையச் செய்துள்ளது.

இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறும்போது, "தெரு நாய்கள் பெருக்கத்தையும், தொல்லையையும் கட்டுப்படுத்த குடியிருப்பு நலச் சங்கங்கள் அல்லது குடியிருப்புவாசிகள் குழுவாக இணைந்து, மாநகராட்சி அலுவலர்களுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து தெரு நாய்களைக் கொல்வது சரியான நடவடிக்கை அல்ல. தெரு நாய்களைக் கொலை செய்வோர் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் அதேவேளையில், பொதுமக்களுக்கு தொல்லை அளித்து வரும் தெரு நாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்படாமல், தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x