நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிவைக்கக் கோரிய வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிவைக்கக் கோரிய வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
Updated on
1 min read

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிவைக்கக் கோரிய வழக்குகளை திங்கட்கிழமைக்கு (ஜனவரி 24) உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் ஓய்வுபெற்ற மருத்துவர் நக்கீரன் தாக்கல் செய்த மனுவில், கரோனா மூன்றாவது அலை உச்சத்தில் உள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது எனவும், தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றப் பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், தற்போதைய நிலையில் தேர்தலை நடத்தினால் கரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும். 17 சதவீதம் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஐ.சி.யூ. அனுமதியும் அதிகரித்து வருகிறது எனத் தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், ஜனவரி 27ஆம் தேதிக்குள் அறிவிப்பாணை வெளியிட வேண்டுமென உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது குறித்துக் கேள்வி எழுப்பினர்.

அப்போது மனுதாரர் தரப்பில், மாநிலத்தில் உள்ள நிலையைப் பொறுத்து தேர்தல் தொடர்பான வழக்கை விசாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் 2021ஆம் ஆண்டில் அனுமதி அளித்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் 4 மாதத்தில் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அந்தக் கால அவகாசம் ஜனவரி 27ஆம் தேதியுடன் முடிவடைகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் தேர்தலை கரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுடன் நடத்துவது தொடர்பாக டிசம்பர் மாதம் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கடைப்பிடிக்கப்பட்ட நடவடிக்கைகள் நகர்ப்புறத் தேர்தலிலும் கடைப்பிடிக்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

அப்போது மற்றொரு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பொதுமக்கள் உடல்நலம் மற்றும் சுகாதாரத்தில் அக்கறை கொண்டு தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர். அன்றைய தினம் இந்த வழக்கு மட்டும் நேரடியான முறையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in