

தமிழகத்தில் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கப்படுவதை தடுப்பதற் காக, கருப்பு பண புழக்கத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக் கும் பணியில் நாட்டிலேயே முதல் முறையாக வருமான வரித் துறை யினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு மே 16-ம் தேதி நடக்கிறது. வாக்குப்பதிவுக்கு 20 நாட்களே உள்ள நிலையில், ஓட்டுக்கு பணம் அளிப்பதை தடுக் கும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் கள மிறங்கியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் வாக்காளர்களுக்கு அளிக்க கருப்புப் பணம் பயன்படுத்தப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக 702 பறக்கும் படைகள், 712 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் அறிவிக்கை கடந்த 22-ம் தேதி வெளியானது. அன்றுமுதல், வருமான வரித் துறை புலனாய்வுப் பிரிவு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு, பதுக்கப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் தகவல் அடிப்படை யில், சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 22-ம் தேதி சோதனை நடத்தி, ரூ.5 கோடியே 2 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர். அதே நாளில் கரூரில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடியே 77 லட்சம், ரூ.1 கோடி மதிப்பிலான வேட்டி, சேலை சிக்கியது. கோவையில் பறக்கும் படையினர் ரூ.1 கோடியே 35 லட்சத்தை கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
தேர்தலின்போது, பணப் பதுக்கல் தொடர்பாக சோதனை நடத்த காவல் துறை, தேர்தல் பறக்கும் படைக்கு அனுமதி கிடை யாது. வருமான வரித் துறைக்கு மட்டுமே அனுமதி உள்ளது. இதனால்தான், நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் மாவட்டம் தோறும் ஒரு உதவி ஆணையர் தலைமையில் 10 பேர் கொண்ட வருமான வரித் துறை குழு அமைக்கப்பட்டுள்ளது. போலீஸார், பறக்கும் படையினர் அளிக்கும் தகவல் அடிப்படையில், சந்தேகப் படும் இடங்களை இக்குழுவினர் கண்காணித்து, பின்னர் சோதனை செய்து வருகின்றனர்.
நாட்டிலேயே அதிக தொகை
கரூரில் தகவல் அடிப்படையில் ஆம்புலன்ஸை ஆய்வு செய்து, அதில் இருந்து ரூ.10 லட்சம், பணம் எண்ணும் இயந்திரம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அங்கு இருந்த வீட்டில் சோதனையிட்டபோது ரூ.4 கோடியே 77 லட்சம் சிக்கியது. நாட்டிலேயே தேர்தலின்போது பிடிபட்ட அதிகபட்ச தொகை இது. சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 22-ம் தேதி ரூ.5 கோடியே 20 லட்சம் சிக்கியது.
ரூ.41 கோடியே 15 லட்சம்
சோதனை தொடர்பான தகவல்களை வருமான வரித் துறை குழுவினர் தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே தெரிவிப்பார்கள். தமிழகத்தில் இதுவரை ரூ.41 கோடியே 15 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு 124 செலவின பார்வையாளர்கள் வந்துள்ளனர். பொதுப் பார்வை யாளர்கள் 29-ம் தேதி வருகின்றனர். தேர்தல் முறைகேடுகள் தொடர் பாக, பார்வையாளர்களிடமே பொதுமக்கள் புகார் அளிக்கலாம். 9444123456 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகவும் புகார் அளிக்கலாம். தேர்தலின்போது எக்காரணம் கொண்டும் ‘144’ தடை உத்தரவு பிறப்பிக்க மாட்டோம்.
இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்.