

சென்னை : குடியரசு தின அணிவகுப்பில் தமிழக வாகனங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திராவிடக் கழகத்தின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உறுதி அளித்துள்ளார்.
இது இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"இந்திய விடுதலையின் பவள விழாவை முன்னிட்டு, எதிர் வரும் ஜனவரி 26ம் குடியரசு நாளில், டெல்லியில் நடைபெறும் அலங்கார அணி வகுப்பில்
தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் அணிவகுப்புக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது.
மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், செக்கிழுத்த செம்மல் வஉசி, விடுதலைக் கவிஞர் பாரதியார் ஆகியோரின் உருவங்கள் இடம் பெற்ற தமிழக அரசின் அணிவகுப்பை, மத்திய அரசு நியமித்த பத்து பேர் கொண்ட குழு நிராகரித்துவிட்டது. தமிழக முதல்வரும், தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்து எழுப்பிய கண்டனக் குரலை டெல்லி அரசு முரட்டுத்தனமாக ஏற்கமறுத்துவிட்டது.
பலமுறை இது குறித்து எடுத்து விளக்கிய பின்பும், தமிழக மக்களை அவமதிக்கும் வகையிலும், கூட்டாட்சி நெறிமுறைகளை குழிதோண்டி புதைக்கும்வகையிலும் மோடி அரசு முடிவெடுத்து செயல்படுவது, வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும்! டெல்லி அரசு அனுமதிக்க மறுத்த ஊர்திகள், தமிழக அரசு நடத்தும் குடியரசு நாள் அணி வகுப்பில் இடம்பெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்த பின்பும், மத்திய அரசு மாநில உணர்வுகளை மதிக்கத் தயாராக இல்லை என்பது தெரிந்துவிட்டது.
குடியரசு நாள் விழா ஊர்வலத்தில், தமிழக மக்களையும் மக்களாட்சி பண்புகளையும் இழிவு செய்யும், மத்திய அரசின் எதேச்சதிகாரப் போக்கினைக்கண்டித்து, ஜனவரி 26ம் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு திராவிடர் கழகம் அழைப்பு விடுத்துள்ளதை மதிமுக வரவேற்கிறது; பாராட்டுகிறது! அனைத்துக் கட்சி அலுவலகங்கள் முன்பும், வீடுகளின் முன்பும் தனி நபர் இடைவெளிவிட்டு, அமைதி வழியில் கண்டன குரல் எழுப்பிடுமாறு தமிழ் மக்கள்அனைவரையும் மதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்."
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.