

சென்னை: குடியரசு தினத்துக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால், தமிழகம் முழுவதும் வாகனச்சோதனையை தீவிரப்படுத்தகாவல் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
குடியரசு தின நிகழ்ச்சிகளுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து, போலீஸார் கண் காணித்து வருகின்றனர்.
மேலும், சாலைகளில் ஆங்காங்கே புதிதாக தடுப்புகள் மற்றும்பந்தல் அமைத்து, போலீஸார் வாகன சோதனை செய்யத் தொடங்கியுள்ளனர். பகல் நேரங்களில் அதிக அளவில் வாகனப் போக்குவரத்து இருப்பதால், குறிப்பிட்ட சில வாகனங்களை மட்டுமே நிறுத்தி சோதனை செய்கின்றனர். மாலை 5 மணிக்குப் பிறகு தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் மீண்டும் கரோனாகட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனினும், மாநில எல்லைகளிலும் போலீஸார் குவிக்கப்பட்டு, தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும்முக்கிய சாலைகளில் வாகனங்கள் சென்றுகொண்டுதான் இருக்கின்றன. எனவே, இரவிலும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளுமாறு காவல் துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இரவு சோதனைக்காக கூடுதல் போலீஸார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
கரோனா ஊரடங்கு பாதுகாப்புப் பணியுடன், குடியரசு தின பாதுகாப்புப் பணியையும் போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வாகனங்களில் வெடிமருந்து இருக்கிறதா என்பதைக் கண்டறிய, மோப்ப நாய்களைப் பயன்படுத்தி சோதனை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
குடியரசு தின நிகழ்ச்சி களுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் போலீஸாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.