Published : 21 Jan 2022 06:40 AM
Last Updated : 21 Jan 2022 06:40 AM

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்; ரூ.4,600 கோடியில் 2-ம் கட்ட பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தருமபுரி மாவட்டத்தில் ரூ.56.20 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ள திட்டப் பணிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி வழியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அருகில் அமைச்சர் கே.என்.நேரு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா ஆகியோர்.

தருமபுரி: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 2-ம் கட்ட பணிகள், ரூ.4,600 கோடியில் செயல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் ரூ.56 கோடியே 20 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ள 46 திட்டப் பணிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி வழியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மேலும், ரூ.35 கோடியே 42 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலான 591 புதிய திட்டப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இதுதவிர, 13,587 பயனாளிகளுக்கு ரூ.157 கோடியே 41 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார். விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தருமபுரி மண்ணில் மகளிர் சுயஉதவிக் குழு என்ற திட்டம் தொடங்கப்பட்டது. அந்த திட்டம் மூலம் தமிழக மகளிர் சொந்தக் காலில் நிற்கும் சூழல் ஏற்பட்டது. அதேபோல, ‘உன்னுடைய வாழ்வில் எதை சாதித்திருக்கிறாய்’ என என்னிடம் கேட்டால், அதற்கான பட்டியலில் இடம்பெறும் மகத்தான திட்டம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்.

அன்றைய முதல்வர் கருணாநிதியின் சிந்தனையில் உதித்த இந்த திட்டத்துக்காக, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த நான் ஜப்பான் நாட்டுக்கு சென்று நிதி ஆதாரம் பெற்று வந்து செயல்படுத்தினேன். புளோரைடு பிரச்சினையால் சிரமப்பட்டு வந்த தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம்தான் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம். இரு மாவட்டங்களிலும் தற்போது இந்த திட்டத்தால் 3 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 7,639 ஊரக குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் குடிநீரின் அளவை உயர்த்தும் வகையில் 2-ம் கட்டப் பணிகளை ரூ.4,600 கோடியில் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இதுதவிர, சேலம் - தருமபுரி மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்தை மேலும் எளிதாக்க காவிரி ஆற்றின் குறுக்கே கோட்டையூர் - ஒட்டனூர் இடையே புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டு, ரூ.250 கோடியில் புதிய சாலை இணைப்பு உருவாக்கப்படும்.

தருமபுரியில் புதிய பால் பதனிடும் நிலையம் அமைக்கப்படும். புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.40 கோடியில் அனைத்து வசதிகள் கொண்ட கூடுதல் அலுவலக கட்டிடம் அமைக்கப்படும். கடந்த 6 மாதத்தில் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 902 கோடி முதலீடுகளை தமிழகம் ஈர்த்துள்ளது. இதுவே, தமிழகத்தில் நல்லாட்சி நடப்பதற்கான உதாரணம்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோரும், தருமபுரியில் நடந்த நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், எம்எல்ஏ-க்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), வெங்கடேஸ்வரன் (தருமபுரி), மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x